நிலஅபகரிப்பை தடுக்க முயன்றவர்கள் மீது கத்திக்குத்து : தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி உள்பட 6 பேர் தலைமறைவு

4 March 2021, 10:00 pm
Kumari kollangodu police station - updatenews360
Quick Share

குமரி அருகே சாலை அமைக்க கொடுக்கப்பட்ட இடத்தை அடியாட்களை கொண்டு அபகரிக்க முயன்ற போது, தடுத்தவர்களை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடிய தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி உட்பட 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே சூழால் ஊராட்சிக்கு உட்பட்டகிராத்தூர் இசக்கிவிளாகம் பகுதியை சேர்ந்த நாராயணன் என்பவரது மகன்கள் வில்சன் (54) மற்றும் தோமஸ் (62). தோமஸ் அரசு போக்குவரத்து துறையில் பேருந்து ஓட்டுனராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர்களது வீடு அமைந்திருக்கும் பகுதியில் பொது வழி ஒன்று செல்கிறது. இந்த சாலையை சொந்தம் கொண்டாடி அந்த பகுதியில் பெந்தேகோஸ்தே சபை நடத்தி வரும் மத போதகர் வில்சன் என்பவர் சாலைக்கு குறுக்காக மதிற்சுவர் கட்ட முயன்றுள்ளார்.

இது சம்பந்தமாக கடந்த வருடம் கொல்லங்கோடு காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு காவல் ஆய்வாளர் தலைமையில் அரசு நில அளவையர் மூலம் இடத்தை அளந்து, மத போதகர் வில்சனுக்கு அதில் இடம் ஏதும் இல்லை இனிமேல் தொந்தரவு ஏதும் செய்யகூடாது என எச்சரித்து அனுப்பி உள்ளனர். இந்த நிலையில் தேர்தல் காரணமாக காவல் ஆய்வாளர் இடம் மாறுதலாகி சென்ற நிலையில், மத போதகர் வில்சன் நித்திரவிளை பகுதியை சேர்ந்த தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்த ரூபின் ஆன்டணி என்பவரின் உதவியுடன் 5க்கும் மேற்பட்ட அடியாட்களுடன் சம்பவ இடத்திற்கு வந்து சாலைக்கான இடத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயன்றுள்ளனர்.

அதற்காக அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை சேதப்படுத்திவிட்டு சாலையின் குறுக்கே பாறை கற்களை கொண்டு மதில்சுவர் கட்ட முயன்றுள்ளனர். அப்போது, அங்கு வந்த வில்சன் மற்றும் தோமஸ் ஆகியோர் ஆக்கிரமிப்பு செய்வதை தடுத்துள்ளனர். உடனே ஆத்திரம் அடைந்த மத போதகர் வில்சன் மற்றும் ரூபன் ஆன்டணி ஆகியோர் சேர்ந்து வில்சன் மற்றும் தோமஸை சரமாரியாக தாக்கி உள்ளனர். அப்போது, தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி ரூபன் ஆன்டணி மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வில்சன் மற்றும் தோமஸ் ஆகியோரை சரமாரியாக கொலைவெறியுடன் குத்தி விட்டு, அங்கிருந்து தாங்கள் வந்த காரில் மத போதகர் வில்சனையும் அழைத்து கொண்டு தப்பி சென்றுள்ளனர்.

இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த வில்சன் மற்றும் தோமஸ் ஆகியோர் உயிருக்கு போராடி கொண்டிருந்த நிலையில் அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்கள் இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இந்த தாக்குதலில் ஜார்ஜ் என்பவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது.

இதனை தொடரந்து வில்சன் மற்றும் தோமஸ் கொல்லங்கோடு போலீசில் மத போதகர் வில்சன் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி ரூபன் ஆன்டணி உட்பட 5 பேர் மீது புகார் கொடுத்தனர். அவர்கள் இருவரும் கொடுத்த புகாரின் பேரில் கொல்லங்கோடு போலீசார் வில்சன் மற்றும் ரூபன் ஆன்டணி உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

Views: - 18

0

0