ஊரடங்கில் மது விற்பனை : கோவை மாநகரில் 15 பேர் கைது.!!
17 August 2020, 10:03 amகோவை : பொது ஊரடங்கில் கோவை மாநகர பகுதிகளில் மது விற்பனை செய்ததாக 15 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஞாயிற்றுக்கிழமைகளில் பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வாரமும் ஞாயிறன்று மருந்துக்கடைகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை தவிர டாஸ்மாக் உள்ளிட்ட மற்ற அனைத்து கடைகளையும் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆனால், ஊரடங்கின் போது சிலர் மதுபானங்களை விற்பனை செய்து வருகின்றனர். கோவையை பொருத்தவ்ரையில் நேற்று பல்வேறு பகுதிகளிலும் மது விற்பனை படு ஜோராக நடைபெற்றது. இதனை பெரும்பாலும் போலீசார் கண்டுகொள்வதில்லை.
கேள்விகள் எழுந்துவிடக்கூடாது என்பதற்காக கண்துடைப்புக்கு கைது செய்து சொந்த ஜாமீனில் விடுவதை போலீசார் வழக்கமாக கொண்டிருக்கின்றனர். அதன்படி நேற்று மட்டும் கோவையில் காந்திபுரம், ரத்தினபுரி, பீளமேடு, செல்வபுரம், போத்தனூர் உள்ளிட்ட வெவ்வேறு காவல் நிலைய எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் தடையை மீறி மது விற்பனை செய்ததாக 15 பேரை போலீசார் கைது செய்து சொந்த ஜாமீனில் விடுவித்துள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்து 119 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.