விமானப்படை பெண் அதிகாரி பாலியல் வழக்கு: தடை செய்யப்பட்ட சோதனைக்கு கண்டனம்… மகளிர் ஆணையம் நோட்டீஸ்..!!

Author: Aarthi Sivakumar
30 September 2021, 6:20 pm
Quick Share

கோவை: விமானப்படை பெண் அதிகாரி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தடை செய்யப்பட்ட இருவிரல் சோதனை நடத்தப்பட்டதற்கு மகளிர் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.

விமானப்படை மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனையின் போது, இரண்டு விரல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, கடந்த கால பாலியல் வரலாறு பற்றி கேட்டதாகவும் பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி புகார் தெரிவித்திருந்தார்.

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் செயல்பட்டு வரும் விமானப் படை பயிற்சி மையத்தில் பெண் அதிகாரி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விளையாட்டின் போது காயமடைந்த அவர், ஓய்வுக்காக தனது அறைக்கு சென்ற போது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்க தாமதமாகி வந்ததால் பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி கோவை காவல் துறையிடம் புகார் அளித்தார். மேலும் விமானப்படை மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனையின் போது, ​​இரண்டு விரல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, கடந்த கால பாலியல் வரலாறு பற்றி கேட்டதாகவும் விமானப் படை அதிகாரிகள் முறையாக விசாரணை நடத்தவில்லை எனவும் பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி தனது புகாரில் தெரிவித்து இருந்தார்.

இந்த புகாரின் பேரில் அமித்தேஷ் மீது ஐபிசி 376 பிரிவின் கீழ் காந்திபுரம் அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

இதனையடுத்து, கடந்த 27 ம் தேதியன்று பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி நீதிமன்றத்தில் ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தை அளித்துள்ளார். இதையடுத்து வருகின்ற 30ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டித்து மகளிர் நீதிமன்ற பொறுப்பு நீதிபதி திலகேஸ்வரி உத்தரவிட்டார். இதனையடுத்து அமித்தேஷ் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் பெண் அதிகாரி பாலியல் வன்கொடுமை தொடர்பாக விமானப்படை தலைமை தளபதிக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை உறுதி செய்ய தடை செய்யப்பட்ட இரு விரல் சோதனை செய்யப்பட்டதற்கு தேசிய மகளிர் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த சோதனை உச்சநீதிமன்ற உத்தரவிற்கும், தனி மனித உரிமைக்கும் எதிரானது எனக்கூறியுள்ள தேசிய மகளிர் ஆணையம் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

Views: - 265

0

0