கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு அதிகரிப்பு : கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!!

20 September 2020, 5:35 pm
Kabini Dam - Updatenews360
Quick Share

கனமழை காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

கர்நாடகாவில் உள்ள நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அம்மாநிலங்களில் உள்ள அணைகள் நிரம்பி வழிகிறது. கிருஷ்ணராஜ சாகர்அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரத்து 668 கனஅடியும் கபிணி அணையில் இருந்த வினாடிக்கு 35 ஆயிரம் கன அடியும் காவிரியில் நீர் திறந்து விடப்படுகிறது.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு காவிரி ஆற்றில் வினாடிக்கு சுமார் 11 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த அளவு நாளை மாலை மேலும் அதிகரிக்ககூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதே போல மேட்டூர் அணையின் நீர் வரத்து 11 ஆயிரத்து 241 கனஅடியாக உள்ளது. டெல்டா பாசனத்துக்காக 18 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படும் நிலையில் நீர் மட்டம் 90 புள்ளி 26 அடியாகவும் நீர் இருப்பு 52 புள்ளி 95 டிஎம்சியாகவும் உள்ளது.

தொடர் கனமழையால் தமிழகத்தில் உள்ள அணைகள் நிரம்பும் தருவாயில் உள்ளது. ஏற்கனவே பில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதே போல பொள்ளாச்சி ஆழியாறு அணையின் நீர் மட்டம் 120 அடி உள்ள நிலையில், தற்போது அணையின் நீர் மட்டம் 118 அடியை எட்டியுள்ளது. 11மதகுகள் கொண்ட ஆழியார் அணையில் 5 மதகுகள் வழியாக வினாடிக்கு 7 ஆயிரத்து 302 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. உபரி நீர் திறப்பால் ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.