தொகுதி எண்ணிக்கையை விட இலட்சியம்தான் முக்கியம் : திமுகவுடனான தொகுதி பங்கீடு குறித்து முத்தரசன் விளக்கம்..!!!

5 March 2021, 6:32 pm
mutharasan - updatenews360
Quick Share

சென்னை : வரும் சட்டப்பேரவை தேர்தலில் தொகுதி எண்ணிக்கையை விட இலட்சியம்தான் தங்களுக்கு முக்கியம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

திமுகவின் கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் வேண்டும் எனக் கோரிக்கை வைத்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், யாரும் எதிர்பார்க்காத விதமாக, திமுக சொன்ன 6 தொகுதிகளை ஏற்று உடன்பாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கையெழுத்திட்டுள்ளது. இது பலருக்கும் அதிர்ச்சியளிக்கக் கூடியதாகவே இருந்து வருகிறது.

அண்ணா அறிவாலயத்தில் இன்று நடந்த பேச்சுவார்த்தையின் போது, திமுக – இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டது. 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும், எந்தெந்த தொகுதிகள் என்பது பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், திமுக தொகுதி பங்கீட்டில் உடன்பாடு செய்து கொண்டதற்கான காரணத்தை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் முத்தரசன் கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது :- தமிழக சட்டப்பேரவை தேர்தல் மிகவும் முக்கியம். இந்தத் தேர்தலில் தொகுதி எண்ணிக்கையா..? இலட்சியமா..? என்று கேட்டால், இலட்சியத்திற்குத்தான் முதலிடம். தமிழ்நாடு வகுப்புவாதத்திற்கு எதிராக களம் கண்ட மாநிலம். சாதி வெறிக்கோ, மத வெறிக்கோ, இடமளிக்காத தமிழக மக்களின் ஒற்றுமையை காப்பாற்றி வரும் மாநிலம். சமூக நீதிக்காக போராடி வெற்றி பெற்ற மாநிலம்.

அப்படிப்பட்ட மாநிலத்தில் நடக்கும் தேர்தலில் வகுப்புவாத சக்திகள், சில கட்சிகளின் பலவீனத்தை பயன்படுத்தி, தமிழகத்தில் காலூன்ற திட்டமிடுகின்றன. ஒரு பக்கம், அதிமுக – பாஜக கூட்டணி, மற்றொரு பக்கம் இன்னொரு அணி. இந்தக் கட்சிகளை எதிர்த்து திமுக தலைமையிலான மதச்சார்ப்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றிபெறுவது மிகமிகத் தேவை. இதனை நன்கு உணர்ந்திருக்கிறோம். இதற்காக, பல மாநாடுகளையும், இயக்கங்களையும் நடத்தியுள்ளோம்.

கடந்த பிப்., 18ம் தேதி மதுரையில் பிரமாண்ட மாநாட்டையும் நடத்தினோம். எங்களது இலட்சியம் நிறைவேற வேண்டும் என்ற நோக்கில், மதாச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை பலப்படுத்த வேண்டும் என்ற நல்ல உயரிய நோக்கம் மற்றும் இலட்சியத்தோடு, இன்றைய தினம் கையெழுத்திட்டுள்ளோம், எனத் தெரிவித்தார்.

Views: - 5

0

0