கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் குறித்து அவதூறு : நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் மனு
17 August 2020, 11:39 amகோவை : கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வரும் நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மனு அளித்துள்ளனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்ட குழுவின் தலைவர் பழனிச்சாமி அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: நான் சிறுவயது முதல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அங்கத்தினர் ஆவேன். முகநூல் பக்கத்தில் மார்க்சியம் வென்றே தீரும் மார்க்சீய வழியில் என்ற குழுவில் எங்கள் கட்சியைச் சேர்ந்த பல உறுப்பினர்கள் தங்களது கருத்துக்களை முன்னிருத்தி பல்வேறு செய்திகளை முகநூலில் பதிவிடுவார்கள்.
இந்த முகநூல் பக்கத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில அலுவலகமான பாலன் இல்லத்தை விபச்சார விடுதி என்றும், மக்களின் மனதில் நீக்கமற நிறைந்துள்ள தோழர் R. நல்லக்கண்ணு அவர்களைப் பற்றி தரக்குறைவாகவும் மாற்றுக்கட்சியைச் சேர்ந்தவர்கள் போலி முகநூல் முகவரிகள் மூலம் பொய்யான செய்தியை பரப்பி வருகிறார்கள்.
எனவே, மேற்படி கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் மீதும், தலைவர்கள் மீதும், கட்சி அலுவலகத்தின் மீதும் ஆபாசமான அவதூறு பரப்பும் நோக்கில் போலி முகநூல் முகவரியினை உருவாக்கி பதிவிடும் நபர்களை கண்டறிந்து கைது செய்து தக்க குற்றவியல் நடவடிக்கை எடுக்கும்படி தங்களை மிகுந்த பணிவுடன் வேண்டிக் கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.