பாஜக வேட்பாளரை வெற்றி பெற செய்தால் “இன்னோவா கார்“ பரிசு: எல்.முருகன் அறவிப்பு.!!
16 August 2020, 3:24 pmசென்னை : வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக வேட்பாளரை வெற்றி பெற செய்யும் மாவட்ட தலைவருக்கு இன்னோவா கார் பரிசாக வழங்கப்படும் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் வரும் 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு அரசியல் கட்சி தீவிரமாக தேர்தலுக்கான வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதே சமயம் எந்தக் கட்சியுடன் எந்த கட்சி கூட்டணி என்பது குறித்த அறிவிப்புகளும் விரைவில் வரவுள்ளது.
இந்த நிலையில் கடந்த மக்களவை தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்திருந்தனர். இந்த கூட்டணி எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் தெடருமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. திமுகவில் இருந்து மூத்த நிர்வாகிகள் வேறு பாஜக உள்ளிட்ட கட்சிக்கு மாறி வருகின்றனர். இந்த நிலையில் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என பாஜக தலைவர் எல்.முருகன் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டம் வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய தமிழக பாஜக தலைவர் எல்முருகன், வரும் சட்டமன்ற தேர்தலிலும் தேசிய ஜனநாயக கூட்டணி தொடரும். தமிழக அரசியலில் வரும் 6 மாதத்தில் மிகப்பெரிய மாற்றம் வரும் என கூறினார்.
மேலும் பாஜக வேட்பாளரை வெற்றி பெறச் செய்யும் மாவட்ட தலைவருக்கு இன்னோவா கார் பரிசாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இதனால் வரும் சட்டமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்த அறிவிப்பால் மாவட்ட பாஜக தலைவர்கள் படு உற்சாகத்தில் உள்ளனர்.