இன்ஸ்டாகிராம் காதல்…. கேரளாவில் இருந்து காதலனைத் தேடி வந்த இளம் பெண்ணுக்கு காத்திருந்த ட்விஸ்ட் : கேக் வெட்டி கொண்டாடிய போலீசார்!!

Author: Udayachandran RadhaKrishnan
14 February 2023, 4:40 pm
Insta love - Updatenews360
Quick Share

கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டம் மெலட்டூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பட்டிக்காடு என்னும் கிராமத்தை சேர்ந்த நபர் திருமணமாகி ஒரே வருடத்தில் தனது மனைவியான சிந்து (வயது 22) என்பவரை தனது கிராமத்தில் தனியாக விட்டுவிட்டு வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்று விட்டார்.

தனியாக வசித்து வந்த சிந்துவுக்கும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த சமித் (வயது 30) என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.

இன்ஸ்டாகிராமில் பேசிய சமித் நான் தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள நூற்பாலையில் மேலாளராக பணியாற்றி வருவதாக இன்ஸ்டாகிராம் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.

கணவன் இல்லாமல் தனிமையில் வாடி வந்த சிந்து காதலனை சந்திக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் யாருக்கும் தெரியாமல் கிளம்பி வந்து வேடசந்தூரில் சமித்தை தேடி உள்ளார்.

அவர் எங்கும் கிடைக்காத நிலையில் இன்ஸ்டாகிராம் மூலம் வேடசந்தூர் பகுதியில் உள்ள ஒரு பெண்ணின் உதவியை நாடியுள்ளார். அந்த பெண்ணும் ஐயோ பாவம் வாருங்கள் என்று கூறி அடைக்கலம் கொடுத்துள்ளார்.

வேடசந்தூர் அண்ணா நகரில் தோழியுடன் தங்கியிருந்து நூற்பாலைக்கு வேலைக்கு சேர்ந்துள்ளார். நூற்பாலைக்கு வேலைக்குச் சென்று கொண்டே காதலித்த சமித் பற்றி தனது தோழியின் இன்ஸ்டாகிராம் மூலம் விசாரித்த பொழுது அவர் ஏற்கனவே திருமணம் ஆகி மனைவி குழந்தைகளுடன் கேரளாவில் வசித்து வருவதும் நூற்பாலை மேலாளர் இல்லை என்பதும் கொத்தனார் வேலை செய்து கொண்டு இன்ஸ்டாகிராம் மூலம் பொய் சொல்லி வந்ததும் தெரிய வந்தது.

இதனால் மனம் வெறுத்த சிந்து தனது ஊருக்கு செல்ல முடியாமல் வேதனையுடன் மூன்று மாதங்களாக வேடசந்தூரிலேயே வசித்து வந்துள்ளார்.

சிந்து காணாமல் போனதை அறிந்த வெளிநாட்டில் வேலை செய்யும் அவரது கணவர் அங்கிருந்தவாரே கேரள போலீசாருக்கு புகார் அளித்தார்.

தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கிய கேரள பெண் போலீசார் இன்ஸ்டாகிராம் மூலம் நட்பாகி பழகி சிந்து வேடசந்தூரில் இருப்பது தெரியவந்தது.

இதனை அடுத்து வேடசந்தூர் வந்த கேரளா போலீசார் வேடசந்தூர் போலீசாரின் உதவியை நாடினர். தமிழக போலீசார் கேரளா, ஆந்திரா, தெலுங்கானா கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு விசாரணைக்காக செல்லும் பொழுது அந்த அந்த மாநில போலீசார் தமிழக போலீசாரை கண்டு கொள்வதில்லை.
ஆனால் வந்தாரை வாழவைக்கும் தமிழகத்தில் வேடசந்தூர் டிஎஸ்பி துர்காதேவி உத்தரவிட்டதை அடுத்து டிஎஸ்பி தனிப்படையினர் மற்றும் கேரளா போலீசார் இணைந்து சிந்து வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு உடல்நிலை சரியில்லை என்று சென்ற பொழுது அவரை சுற்றி வளைத்து பிடித்தனர்.

கேரளாவில் இருந்து தமிழகம் வந்து தமிழக போலீசார் செய்த உதவியை நினைத்து பெருமை அடைந்த கேரளா போலீசார் வேடசந்தூர் போலீசார் அனைவருக்கும் வந்த காரியம் வெற்றி அடைந்த மகிழ்ச்சியில் கேக் வாங்கி அனைவருக்கும் வழங்கி தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து சென்றனர்.

அதன் பிறகு சிந்துவை கேரளாவுக்கு அழைத்துச் சென்றனர். இன்ஸ்டாகிராமில் நான் தொழிற்சாலை மேனேஜர் தொழிலதிபர் வசதியானவர் என்பதை நம்பி ஏராளமான இளம் பெண்கள் வீணாகி வருவது குறித்து போலீசார் எவ்வளவு அறிவுறுத்தியும் இளம்பெண்கள் கண்டு கொள்வதில்லை என சமூக ஆர்வலர்கள் வேதனைப்படுகின்றனர்.

Views: - 175

0

0