பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி தீவிரம் : வரவு ரூ.1 கோடியை தாண்டியது!!

Author: Udhayakumar Raman
28 July 2021, 6:38 pm
Palani Temple - Updatenews360
Quick Share

திண்டுக்கல் : பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டத்தில் பக்தர்கள் காணிக்கை வரவு ரூபாய் ஒரு கோடியை தாண்டியது.

தமிழகத்தின் முதன்மைக் கோயிலான பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் கொரோனா இரண்டாம் அலை ஊரடங்கு முடிந்த நிலையில் பல்வேறு தளர்வுகளுடன் கடந்த ஜூலை மாதம் 5ம் தேதி திறக்கப்பட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வழிவகை செய்யப்பட்டது.

தங்கத்தேர், ரோப்கார் போன்றவை இயக்கப்படாத நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் நாள்தோறும் பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வந்தனர்.

இந்நிலையில் திருக்கோயில் உண்டியல்கள் நிறைந்ததைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டு கார்த்திகை மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டது. இதில் பக்தர்களின் காணிக்கை வரவாக ரொக்கம் ரூபாய் ஒரு கோடியே இரண்டு இலட்சத்து 31 ஆயிரத்து 250 கிடைத்துள்ளது.

உண்டியலில் பக்தர்கள் தங்கத்தாலான வேல், தாலி, மோதிரம், செயின், தங்கக்காசு போன்றவற்றையும் வெள்ளியால் ஆன காவடி, வளையம், வீடு, தொட்டில், வேல், கொலுசு, பாதம் போன்றவற்றையும் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

தங்கம் 112 கிராமும், வெள்ளி 1,125 கிராமும் கிடைத்தது. பல்வேறு நாட்டு கரன்சிகள், நாணயங்களும் நிறைய கிடைக்கப்பெற்றது. உண்டியல் எண்ணிக்கையில் திருக்கோயில் கல்லூரி பணியாளர்கள், திருக்கோயில் அலுவலர்கள், வங்கி பணியாளர்கள் என நூற்றுக்கணக்கானோர் ஈடுபட்டனர்.

நிகழ்ச்சியில் பழனிக்கோயில் இணை ஆணையர் நடராஜன், துணை ஆணையர்(பொறுப்பு) செந்தில்குமார், மதுரை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் விஜயன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Views: - 157

0

0