போதையில் பாதை மாறிய பள்ளி மாணவி : சாலையை கடக்க முடியாமல் தள்ளாடிய வீடியோ… எங்கே செல்கிறது மாணவர்கள் சமுதாயம்?

Author: Udayachandran RadhaKrishnan
3 May 2022, 5:22 pm
Minor School Girl Liquor - Updatenews360
Quick Share

தருமபுரி : இண்டூர் பகுதியில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு பள்ளி மாணவிகள் வகுப்பறையை செல்லாமல் மது அருந்திவிட்டு தள்ளாடியதாக வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.

இண்டூர் பேருந்துநிலையத்தில் மாணவி ஒருவர் மது அருந்திவிட்டு தள்ளாடிய படி வந்துள்ளார். இதனை கண்ட பொதுமக்களில் ஒரு சிலர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.

இது குறித்த வீடியோவை வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதள குழுக்களிலும் பகிர்ந்ததால் தற்போது அதிக அளவில் பரவி வருகின்றன. இந்நிலையில் சாலையின் மறுபுறத்தில் இருந்தாக கூறப்படும் 4 மாணவிகளில் ஒரு மாணவி மட்டும் சாலையைக் கடக்க முயற்சித்தபோது சாலையின் நடுவில் இருந்த சென்டர் மீடியனில் நிற்க முடியாமல் கைத்தாங்கலாக சாய்ந்து நின்றுள்ளார்.

மேலும் சாலையைக் கடக்கும் பொழுது கடக்க முடியாமல் தள்ளாடிய காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. மற்ற மூன்று மாணவிகள் சாலையின் மறு புறத்திலேயே நின்றதாக அப்பகுதியில் இருந்தோர் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் மற்றும் இந்த வீடியோ குறித்து சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இண்டூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அரசு மதுபான கடை எதுவும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அவ்வாறு இருக்கும்பொழுது மற்ற பகுதியில் உள்ள மதுபான கடைக்கு மாணவிகள் சென்று வாங்கினார்களா அல்லது மாணவிகளுக்கு எவ்வாறு மது கிடைத்தது என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது. அல்லது யாரேனும் மாணவிகளை அழைத்து சென்று மதுவை வாங்கி கொடுத்தார்களா என்ற சந்தேகமும் எழுகிறது.

எது எப்படி இருந்தாலும் தற்பொழுது பள்ளி மாணவிகளும் வகுப்பை புறக்கணித்து விட்டு மது அருந்தி தள்ளாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது மிகவும் வேதனை அளிக்கிறது என சமூக ஆர்வலர்களும் அப்பகுதியில் மாணவிகள் தள்ளாடியதை நேரில் பார்த்தவர்களும் தெரிவிக்கின்றனர்.

தருமபுரி மாவட்டத்தில் ஏற்கனவே பெண் சிசுக் கொலைகள், பள்ளி சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் இளம் வயது திருமணங்கள் உள்ளிட்ட குற்றங்களை தடுப்பதற்காக தமிழக அரசும் காவல் துறையும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இருப்பினும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது பெண் குழந்தைகளை பெற்ற பெற்றோர்களை பெரும் கவலைக்கு உள்ளாகி வருகிறது.

Views: - 1028

0

0