கமுதியில் மீண்டும் அரசியல் மோதல்? பாஜகவால் மீண்டும் சர்ச்சை!!

Author: Udayachandran RadhaKrishnan
12 February 2022, 4:49 pm
Kamuthi - Updatenews360
Quick Share

கமுதி பேரூராட்சித் தேர்தலில் மத, சாதி, அரசியல் மோதல்களை தவிர்க்கும் வகையில் பல ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வரும், நெறிமுறையை பாஜக மீறியிருப்பது, சமூக நல்லிணக்கத்துக்கு குந்தகம் விளைவிப்பதாக அமைந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சாதிக் கலவரங்களால் பாதிக்கப்பட்ட இராமநாதபுரம் மாவட்டத்தின், கமுதி பேரூராட்சியில் கடந்த 1970ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின்போது இஸ்லாமிய மற்றும் நாடார் சமூகத்தினருக்கு இடையே கடும் போட்டி இருந்தது.
நாடார் சமுதாய வேட்பாளராக செளந்திர பாண்டியன் என்பவரும், இஸ்லாமிய சமூக வேட்பாளரான முகமது இப்ராஹீம் உசைன் என்பவரும் போட்டியிட்டனர். போட்டி தீவிரமடைந்த நிலையில் இரு தரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு கலவரமாக மாறியது. இதில் பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

சமுதாய ஒப்பந்தம்:

இஸ்லாமிய சமூக வேட்பாளருக்கு ஆதரவு தந்தமைக்காக ஆதிதிராவிட சமூக மக்களின் குடிசைகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. எனினும், அத்தேர்தலில் 420 வாக்குகள் வித்தியாசத்தில் இஸ்லாமிய சமூக வேட்பாளர் வெற்றி பெற்று பேரூராட்சித் தலைவர் ஆனார். வீரசிகாமணி என்கிற அகமுடையார் சமூகத்தைச் சேர்ந்தவர் துணைத் தலைவர் ஆனார். இதனைத் தொடர்ந்து 1971ம் ஆண்டு சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏவான திரு.காதர் பாட்சா (எ) வெள்ளைச்சாமி இரு சமூக மக்களுக்கும் இடையே சமரசம் செய்து வைத்தார். அதன் பிறகு 10 ஆண்டுகள் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவில்லை.

சுழற்சி முறையில் தேர்வு:

1986ஆம் ஆண்டு காதர் பாட்சா (எ) வெள்ளைச்சாமி, டி.எஸ்.தாவுது, இப்ராஹீம், சகாய ராணி ஆகியோர் முன்னிலையில் அனைத்து சமூகத்தினரின் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி ஒரு முறை நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர் தலைவராகவும், துணைத் தலைவராக கிறிஸ்துவ சமுதாயத்தைச் சேர்ந்தவரும், அடுத்த முறை இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர் தலைவராகவும், துணைத் தலைவராக செட்டியார் சமூகத்தைச் சேர்ந்தவர் என சுழற்சி முறையில் தேர்வு செய்யப்பட வேண்டும் என ஒருமனதாக அனைத்து சமுதாயத்தினர் முன்னிலையில் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

கட்சியும் வேண்டாம், கொடியும் வேண்டாம்:

கட்சி தேவையில்லை என்பதே இந்த ஒப்பந்தத்தின் சாராம்சமாக உள்ளது. இந்த பாணியிலேயே அங்கு வசிக்கும் சிறுபான்மை சமூகத்தினர், தங்களுக்குள் பேசி வார்டு உறுப்பினர்களை தேர்வு செய்து கொள்கின்றனர்.

இந்த ஒப்பந்தத்தின்படியே 1986ஆம் ஆண்டு பெரியசாமி (நாடார்) தலைவராகவும், வியாகுலம் பிள்ளை (கிறிஸ்துவர்) துணைத் தலைவராகவும் நிறுத்தப்பட்டனர். அன்றைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் நேரடியாக தலையிட்டு அதிமுக சார்பில் கந்து இக்பால் என்பவரை இரட்டை இலை சின்னத்தில் நிறுத்தினார். அனைத்து சமுதாய ஒற்றுமைக்கு எதிராக போட்டியிட்ட எம்.ஜி.ஆர் ஆதரவு பெற்ற அதிமுக வேட்பாளர் கந்து இக்பால் டெப்பாசிட் இழக்கின்ற வகையில் அப்போது படுதோல்வி அடைந்தார்.

1986ம் ஆண்டு தொடங்கி கடந்த 35 ஆண்டுகளாக அனைத்து சமுதாய ஒருமித்த கருத்துடன் தேர்ந்தெடுக்கப்படுபவர்களே தலைவராகவும், துணைத்தலைவராகவும், வார்டு உறுப்பினர்களாகவும் ஆகி வருகின்றனர். பேரூராட்சித் தேர்தலில் போட்டியிடுபவர்கள் கட்சி சார்பாக இல்லாமல் சமுதாய ஒருமித்த கருத்தின் அடிப்படையில் சுயேட்சைகளாகவே தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

அந்த வகையில் தற்போதைய உள்ளாட்சித் தேர்தலிலும், அப்துல் வஹாப் சகாயராணி என்ற திமுக குடும்பத்தைச் சேர்ந்தவரை அனைத்து சமுதாயத்தினரும் ஒன்றிணைந்து தலைவர் வேட்பாளராக நிறுத்தியுள்ளனர். சமுதாய ஒற்றுமை ஏற்பட்டதன் காரணமாக வேறு எந்த அரசியல் கட்சியும் தேர்தலில் போட்டியிடாது, ஊர்கூடி தேர்வு செய்யப்படுவோர் கூட சுயேட்சை என்று தான் மனு செய்துள்ளனர். சகாயராணி உட்பட 11 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் 14வது வார்டு கவுன்சிலராக போட்டியின்றி தேர்வான சத்யா ஜோதி ராஜா என்பவர் அவர் சார்ந்த சமுதாய ஒற்றுமையின் அடிப்படையில் ஒருமித்த கருத்துடன் தேர்வு செய்யப்பட்டு ‘சுயேட்சை வேட்பாளர்’ என்று தான் மனு செய்ய இருந்தார். கடைசி நேரத்தில் மேற்கண்ட நெறிமுறைக்கு புறம்பாக அவர் பாஜகவின் கடிதம் கொடுத்ததால் பாஜக வேட்பாளர் என அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே, மதநல்லிணக்க ஒற்றுமையின் கீழ் தேர்வாகி கிடைத்த வெற்றியை மறைத்து, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியின்றி முதல் வெற்றியை பெற்றுவிட்டதாக பாஜகவினர் அலப்பறையில் ஈடுபட்டு மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டுள்ளதாக ஊர்மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்..

மேலும் பல ஆண்டுகளாக சாதி, மத, அரசியல் மோதல்களை தடுக்கும் நோக்கில் பின்பற்றப்பட்டு வரும் நெறிமுறையை சுயலாபத்துக்காக பாஜக மீறியதாகவும், இதனால் மதநல்லிணக்கத்துக்கு குந்தகம் ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் வேதனையை வெளிப்படுத்துகின்றனர்

தற்போதைய கமுதி பேரூராட்சித் தேர்தலில் போட்டியின்றி தேர்வான 11 பேரில் சகாயராணி உள்ளிட்ட 7 பேர் திமுகவைச் சேர்ந்தவர்கள். ஆனால் கட்சியை இவர்கள் அடையாளப்படுத்தாமல் சுயேட்சை என்றே தங்களை அடையாளப்படுத்தி இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..

Views: - 637

1

0