லண்டனில் இருந்து கோவை வந்த 133 பேர் தனிப்படுத்தல்

23 December 2020, 9:15 pm
Quick Share

கோவை: இங்கிலாந்து நாட்டில் இருந்து கோவைக்கு வந்த 133 தனிமைப் படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்தில் பரிணாம மாற்றம் கொண்ட புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இது தற்போதுள்ள வைரசை விட 70 சதவீதம் வேகமாக பரவக்கூடியது. இதனைத்தொடர்ந்து இந்தியாவில் வரும் 31-ம் தேதி வரை இங்கிலாந்திற்கான விமானப் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.

விமான நிலையங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், இங்கிலாந்தில் இருந்து இந்தியாவிற்கு கடந்த நவம்பர் மாதம் முதல் வந்த பயணிகளின் விவரங்கள் கண்டறியப்பட்டு, அவர்களை கண்காணித்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து, கோவை மாவட்டத்தில் சுகாதாரத்துறையினர் கடந்த நவம்பர் மாதம் முதல் இங்கிலாந்தில் இருந்து சென்னை, கொச்சி உள்ளிட்ட பல்வேறு விமான நிைலயங்கள் மற்றும் தரைவழியாக கோவைக்கு 133 பயணிகள் வந்துள்ளனர்.

இவர்களை கண்டறிந்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் நடவடிக்கையில் தற்போது சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, தற்போது வரை 97 பேர் கண்டறியப்பட்டு கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டுள்ளது. இந்த பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை. மேலும், சிலரை கண்டறியும் பணிகள் நடந்து வருகிறது. பலர் தாமாக முன்வந்து தனியார் பரிசோதனை மையங்களில் கொரோனா டெஸ்ட் எடுத்துள்ளனர். இருப்பினும், சுகாதாரத்துறையினர் அவர்களுக்கும் பரிசோதனை செய்ய முடிவு செய்துள்ளனர்.

இது குறித்து கோவை மாவட்ட சுகாதாரத்துறையினர் கூறுகையில், “கோவை மாவட்டத்திற்கு இங்கிலாந்தில் இருந்து கடந்த நவம்பர் மாதம் முதல் மொத்தம் 133 பேர் வந்துள்ளனர். இவர்களை கண்டறியும் பணிகள் நடந்து வருகிறது. இவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படவுள்ளது. இதில், நெகட்டிவ் என தெரியவந்தால் அவர்கள் 12 நாட்கள் தொடர்ந்து கண்காணிப்பில் வைக்கப்படுவர். பாசிட்டிவ் என ரிசல்ட் வந்தால், சம்மந்தப்பட்ட நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும்” என்றனர்.

Views: - 1

0

0