காலில் விழுந்து அரசு ஊழியர் மன்னிப்பு கேட்ட விவகாரம்: வீடியோ எடுப்பது தெரிந்தவுடன் காலில் விழுந்து நடித்தது அம்பலம்..!!!

Author: Aarthi Sivakumar
14 August 2021, 9:12 am
Quick Share

கோவை: அன்னூரில் அரசு ஊழியர் காலில் விழுந்த விவகாரத்தில் புதிய திருப்பமாக வீடியோ எடுப்பது தெரிந்தவுடன் காலில் விழுந்து நடித்தது அம்பலமாகியுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த அன்னூர் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியான கோபி ராசிபுரத்தை சேர்ந்தவர் கோபால்சாமி. விவசாயியான இவர் ஒட்டர் பாளையம் விஏஓ கலைச்செல்வியிடம் தனது இட கிரையம் சம்பந்தமான ஆவணங்களை பெறச்சென்ற பொழுது அலுவலகத்தில் வைத்து விஏஓ-விற்கும்,கோபால் சாமிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனை விஏஓ-வின் உதவியாளர் முத்துச்சாமி தட்டிக்கேட்ட போது அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றி தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, கோபால்சாமியை முத்துசாமி தள்ளி விட்டுள்ளார். இதனால் கோபால்சாமி கீழே விழுந்த நிலையில் முத்துசாமி அவரிடம் மன்னிப்பு கேட்க காலில் விழுந்துள்ளார். இதனை அங்கிருந்து ஒருவர் செல்போனில் படம் பிடித்து அதனை சமூக வலைதளங்களில் பகிர பிரச்சனை வேறு கோணத்தில் திசை திருப்பப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த கோவை ஆட்சியர் சமீரன் மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் தலைமையில் குழு அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டார். இதனிடையே கோவை எஸ்.பி.செல்வநாகரத்தினம் அன்னூர் காவல் நிலையத்தில் வைத்து முத்துச்சாமி, கோபால்சாமி,விஏஓ கலைச்செல்வி உள்ளிட்ட மூவரிடமும் விசாரணை மேற்கொண்டார்.

சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற விசாரணைக்கு பின்னர் இதுகுறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த எஸ்.பி.செல்வநாகரத்தினம் விசாரணை நடைபெற்று வருவதாகவும்,விசாரணையின் முடிவில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தெரிவிக்கப்படும் என்றார்.

மேலும்,மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ்,வட்டாட்சியர் ரத்தினம் உள்ளிட்டோரும் தாலுக்கா அலுவலகத்தில் வைத்து மேற்கண்ட மூவரிடமும் விசாரணை மேற்கொண்டனர். சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த விசாரணைக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் இச்சம்பவத்தின் போது உடனிருந்த ஹரி என்பவரிடம் மட்டும் விசாரணை நடத்த வேண்டியுள்ளது.அந்த விசாரணைக்கு பின்னர் இச்சம்பவம் குறித்த அறிக்கை மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்படும் என தெரிவித்தார்.

இந்த அறிக்கை சமர்பிக்கப்பட்ட பின்னர் மாவட்ட ஆட்சியர் சமீரன் விவசாயி கோபால்சாமி மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதனடிப்படையில் சாதிய தீண்டாமை என கூறி முத்துசாமியும், அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்ததாக விஏஓ கலைச்செல்வியும் அன்னூர் காவல்துறையில் புகார் அளித்ததை தொடர்ந்து கோபால்சாமி மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்புச்சட்டம், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் அன்னூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கோபால்சாமியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதனிடையே கோபால்சாமியும் தன்னை தாக்கியது, தனது தந்தை சொத்தை தனக்கு தெரியாமல் விஏஓ வேறு ஒருவருக்கு பெயர் மாற்றி கொடுத்தது என அன்னூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இவ்வழக்கில் முக்கிய திருப்பமாக தற்போது ஏற்கனவே வெளியிட்ட வீடியோவுக்கு நேர்மாறாக தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த விஏஓவின் உதவியாளர் முத்துசாமி
விவசாயி கோபால்சாமியை முதலில் தாக்கும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

இவ்வீடியோவில் விஏஓவின் உதவியாளர் முத்துசாமி விவசாயி கோபால்சாமியை கன்னத்தில் தாக்கி தள்ளிவிட்ட நிலையில் நிலை தடுமாறிய விவசாயி கீழே விழுந்து கிடக்க அவரை விஏஓ தூக்கி விடுகிறார்.மேலும், லஞ்சம் கேட்பதாக கூறியதால் முத்துசாமி விவசாயி கோபால்சாமியை தாக்கியது அதில் பதிவாகி உள்ளது.பின்னர், அலுவலகத்தை விட்டு வெளியே வந்து விட்டு பின்னர் மீண்டும் அலுவலகத்தினுள் செல்லும் போது தான் அவர் ஜாதி பெயரை கூறி திட்டியதாக கூறுவதும் தெரியவருகிறது.

இன்றைய தினம் இந்த வீடியோவை வெளியிட்டுள்ள தமிழக விவசாயிகள் சங்கத்தினர் இச்சம்பவம் குறித்து விஏஓ-வின் உதவியாளர் முத்துசாமி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேட்டுப்பாளையம் டிஎஸ்பி ஜெயசிங்கிடம் இந்த வீடியோ ஆதாரத்தை கொடுத்து வேண்டுமென்றே ஜோடிக்கப்பட்ட வீடியோக்களை எடுத்து அதனை வெளியிட்டு ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிரானவர்களாக காட்டவும், பணம் பறிக்கும் நோக்கில் செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்துள்ளனர்.

மேலும், விவசாயி கோபால்சாமியை தாக்கிய விஏஓவின் உதவியாளர் முத்துசாமி மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Views: - 780

1

0