அரசியலுக்காக குற்றம்சாட்டுவது தவறு : கனிமொழிக்கு அமைச்சர் கடம்பூர் ராஜு ‘குட்டு‘

24 August 2020, 5:05 pm
Kadamboor Raju - Updatenews360
Quick Share

தூத்துக்குடி : அரசு விழாக்களில் மக்கள் பிரதிநிதிகள் புறக்கணிக்கப்படுவதாக கூறுவது கனிமொழி எம்பி அரசியலுக்காக குற்றம் சொல்வது தவறான செயல் என அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார்.

தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்டங்களை வழங்கினார். இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் பண்ணை பசுமை காய்கறி கடையின் ஏழாம் ஆண்டு தொடக்க நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட அமைச்சர் கடம்பூர் ராஜு வாடிக்கையாளர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார். தொடர்ந்து கூட்டுறவு சங்கத்தின் மூலமாக பயனாளி ஒருவருக்கு தொழில் கடன் வழங்கப்பட்டது.

இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜு கூறுகையில், இந்தியாவில் படப்பிடிப்பு நடத்துவதற்கான வழிமுறைகளை மத்திய அரசு நேற்று வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் சினிமா படப்பிடிப்பு நடத்துவதற்கு அனுமதி அளிக்கக் கூடிய சூழல் விரைவில் உருவாகும். ஏற்கனவே சின்னத்திரை கலைஞர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாகவே சின்னத்திரை படப்பிடிப்புகள் அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறும் அரசு விழாக்களுக்கு மக்கள் பிரதிநிதிகளான எம்பி எம்எல்ஏக்கள் அழைக்கப்படுவதில்லை என கனிமொழி கூறிய குற்றச்சாட்டு தவறானது. ஏனெனில் தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறும் அனைத்து அரசு சார்ந்த விழாக்களுக்கும் மக்கள் பிரதிநிதிகளின் பெயர்களை அச்சடிக்கப்பட்டு அவர்களுக்கு முறையாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

விழாவில் கலந்து கொள்வதும், கொள்ளாததும் அவரவர் விருப்பம் சார்ந்தது‌. தூத்துக்குடி எம்பி கனிமொழி சென்னையில் வசித்து வருகிறார். அவர் தூத்துக்குடிக்கு திடீர் விசிட் அடிப்பது போல வந்து செல்கிறார். எனவே அரசியலுக்காக கனிமொழி குற்றச்சாட்டு கூறுவது தவறான செயல் என்று கூறினார்.

ஓடிடி மூலமாக திரைப்படங்களை திரையிடுவது ஆரோக்கியமானது அல்ல என்பதை ஏற்கனவே சொல்லியிருக்கிறோம். ஓடிடியில் திரைப்படங்களை வெளியிடுவது குறித்து நடிகர் சங்கம், திரையரங்கு உரிமையாளர்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஆகிய மூவரும் அமர்ந்து பேசி எடுக்க வேண்டிய முடிவு. ஆன்லைனில் திரைப்படங்களை வெளியிடுவது மூலமாக பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வருமானம் பாதிக்கப்படும். எனவே முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். பேச்சுவார்த்தைக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தால் அரசு உதவி செய்யும்.

கொரோனா அச்சுறுத்தலால் திரைப்பட துறைக்கு பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆனாலும் திரைப்படத் தொழிலாளர்களின் நலனுக்காக திரைப்பட தொழிலாளர் நல வாரியம் மூலமாக தமிழக அரசு அதன் உறுப்பினர்களுக்கு ரூ.2000 ரூபாய் உதவித்தொகை அளித்துள்ளது. இது தவிர வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டி கொடுக்கவும் உத்தரவிட்டு உள்ளது என்றார்.

Views: - 23

0

0