ஐ.யூ.எம்.எல்.க்கு 3… ம.ம.க.வுக்கு 2…. இஸ்லாமிய கட்சிகளுடன் சுமூகமாக தொகுதி பங்கீட்டை முடித்த திமுக..!!!

1 March 2021, 8:04 pm
DMK - IUML - updatenews360
Quick Share

சென்னை : வரும் சட்டப்பேரவை தேர்தலுக்காக, இந்திய முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டை திமுக சுமூகமாக முடித்தது.

திமுக தலைமையிலான கூட்டணியில் டசன் கணக்கிலான கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. ஆனால், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையிலும், எந்த கட்சியிடனும் கூட்டணியையோ, தொகுதி பங்கீட்டையோ உறுதி செய்யாமல் திமுக இருந்து வந்தது.

இந்த நிலையில், தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த இந்தியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சிக்கு திமுக தலைமையிடம் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டது. அதனையேற்று, அண்ணா அறிவாலயம் சென்ற இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் காதர் மொய்தீன், தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், 3 தொகுதிகள் ஒதுக்கப்படுவதாகவும், எந்ததெந்த தொகுதிகள் என்பதை பின்னர் அறிவிக்கப்படுவதாகவும் முடிவு செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய காதர் மொய்தீன், “இந்திய யூனியன் முஸ்லீம் கட்சிக்கு 3 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. கேரளாவில் 30 இடங்களில் போட்டியிட இருக்கிறோம். அதேபோல, அசாம், மேற்கு வங்கம் மாநில தேர்தல்களிலும் களம் காண்கிறாம். தமிழகத்தில் தனி சின்னமான ஏணி சின்னத்தில் போட்டியிட இருக்கிறோம்,” எனக் கூறினார்.

இதைத் தெடர்ந்து, நடந்த பேச்சுவார்த்தையில் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்த விபரம் ஓரிரு நாளில் வெளியிடப்படும் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்தார்.

Views: - 1

0

0