நகைப் பட்டறையில் கொள்ளை : 30 சவரன் மாயம்!!
20 September 2020, 4:33 pmகன்னியாகுமரி : தக்கலை அருகே நகை பட்டறையின் பூட்டை உடைத்து 30 சவரன் நகைகள் கொள்ளையடித்த மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே குமாரபுரம் பகுதியில் பகவதி என்பவருக்கு சொந்தமான நகை பட்டறை அமைந்துள்ளது. நேற்று நள்ளிரவில் இந்தப் பட்டறையின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற கொள்ளையர்கள், அங்கு இரும்பு பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 30 சவரன் நகைகளை பெட்டியோடு கடைக்கு வெளியே எடுத்துச் சென்று பெட்டியை உடைத்து நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இன்று காலை 11 மணி அளவில் பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட கடையை கண்டு அதிர்ச்சி அடைந்த பகவதி, கொற்றிகோடு போலீசாருக்கு அளித்த தகவலின் அடிப்படையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், மோப்பநாய் ஏஞ்சல் மற்றும் கைரேகை தடயவியல் நிபுணர்கள் மூலம் கொளளையர்களின் விரல் ரேகை பதிவுகளையும் ஆய்வு செய்துள்ளனர். இத்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நகைகளை கொள்ளையடித்த கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.