மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு : பணியாணை வழங்கிய கோவை மாவட்ட ஆட்சியர்!!

Author: Udayachandran RadhaKrishnan
25 August 2021, 6:55 pm
Job For Handicaped - Updatenews360
Quick Share

கோவை : கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் மாற்றுத் திறனாளிகளுக்கு தனியார் நிறுவனங்களில் பணி நியமன ஆணை மாவட்ட ஆட்சியரால் வழங்கப்பட்டது.

கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் கோவை மாவட்ட நிர்வாகம் தன்னார்வ தொண்டு நிறுவனம் இணைந்து நடத்திய மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாமில் காது கேட்காத, வாய் பேச முடியாத நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் நிறுவனங்களில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

இந்த முகாமில் கலந்து கொண்ட கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தனியார் நிறுவனங்களில் பணிக்கு தேர்வான மாற்றுத் திறனாளிகளுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தன்னார்வ அமைப்புடன் இணைந்து இந்த வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுவதாக தெரிவித்தார். இதில் காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகள் 25 பேருக்கு வேலைவாய்ப்பு தற்போது வரை பணி நியமன ஆணை வழங்கப்பட்டிருப்பதாகவும், மாலை வரை நடைபெறும் இந்த முகாமில் 50 பேர் வரை வேலை கிடைக்க வாய்ப்பிருப்பதாக தெரிவித்தார்.

தனியார் நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகின்ற செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் நிரந்தர ஆலோசனை மையம் ஒன்றை அமைக்க முடிவெடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.

இம்முகாம் நடத்தப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாக மாற்று திறனாளிகள் தெரிவித்தனர். கோவை மாவட்ட நிர்வாகத்திற்கு மாற்றுத்திறனாளிகளின் பெற்றோர்கள் நன்றி தெரிவித்தனர்.

Views: - 169

1

0