புதுச்சேரியில் எம்.எல்.ஏ. ஜான்குமாருக்கு அமைச்சர் பதவி வழங்க வலியுறுத்தி ஆதரவாளர்கள் போராட்டம்

21 June 2021, 5:58 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் ஜான்குமார் எம்எல்ஏவுக்கு அமைச்சர் பதவி வழங்கக் கோரி அவரது ஆதரவாளர்கள் 75 ற்கும் மேற்பட்டோர் கருப்பு சட்டை அணிந்து பாரதிய ஜனதா கட்சி கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுனர்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் என் ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது. கடந்த மே மாதம் 7ஆம் தேதி முதலமைச்சராக ரங்கசாமி பதவி ஏற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து கடந்த 26 ஆம் தேதி தற்காலிக சபாநாயகராக லட்சுமி நாராயணன் பதவியேற்று அன்றைய தினமே சட்டமன்ற உறுப்பினர்கள் நியமனம் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்நிலையில் சபாநாயகர் மற்றும் அமைச்சர் பதவி பங்கீட்டில் என் ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி இருந்து வந்தது. இதனையடுத்து பாஜக மேலிட தலைமை முதல்-அமைச்சர் ரங்கசாமியுடன் பேசி பாஜகவிற்கு சபாநாயகர் மற்றும் இரண்டு அமைச்சர்கள் கொடுக்க ஒப்பந்தம் ஏற்பட்டது.

இதனை அடுத்து சபாநாயகராக பாஜகவை சேர்ந்த செல்வம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு சபாநாயகராக பதவி ஏற்றுக்கொண்டார். இந்நிலையில் பாஜகவில் நமச்சிவாயம் மற்றும் ஜான் குமார் ஆகியோர் அமைச்சர்களாக முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜான்குமாருக்கு பதிலாக ஊசுடு தொகுதி எம்எல்ஏ சாய் சரவணன் அமைச்சர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பரவியது. இதனையடுத்து நெல்லிதோப்பு மற்றும் காமராஜ் நகர் தொகுதி களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் ஜான்குமார் எம்எல்ஏவிற்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என வலியுறுத்தி பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின் போது அங்கிருந்த பேனர் கிழித்து எறியப்பட்டு கட்டிடத்தின் மீது கற்கள் வீசப்பட்டது. இதனையடுத்து அங்கு வந்த போலீசார் மற்றும் பாஜக நிர்வாகிகள் அவர்களை சமாதானப்படுத்தி கலையச்செய்தனர். இந்நிலையில் கடந்த இரு தினங்களாக இது தொடர்பாக எந்த செய்திகளும் வெளிவராத நிலையில், இன்று திடீரென ஜான்குமார் ஆதரவாளர்கள் 75 க்கு மேற்பட்டோர் பாலாஜி திரையரங்கம் முன்பு கருப்பு சட்டை அணிந்து பாஜக கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய பாஜக தலைமை சிறுபான்மையினரான ஜான் குமாருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டுமென வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். பாஜக தலைமை அறிவித்தபடி ஜான் குமாருக்கு எம்எல்ஏவிற்கு பதவி வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

புதுச்சேரியில் அமைச்சர் பட்டியலை இன்று துணைநிலை ஆளுநரை சந்தித்து முதலமைச்சர் ரங்கசாமி வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் ஜான் குமார் ஆதரவாளர்கள் அமைச்சர் பதவி கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..

Views: - 421

0

0