கடமையுணர்ச்சி பிரமிப்பூட்டுகிறது… உயிரைக் காத்த பெண் காவல் ஆய்வாளருக்கு கமல்ஹாசன் சல்யூட்..!!
Author: Babu Lakshmanan11 November 2021, 4:03 pm
சென்னை: கல்லறையில் மயங்கி கிடந்த ஊழியரை தோளில் சுமந்து சென்று மருத்துவமனையில் அனுமதித்த பெண் காவல் ஆய்வாளரின் செயலுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
கீழ்ப்பாக்கம் கல்லறையில் வேலை செய்து வந்த உதயகுமார் என்பவர் கனமழை காரணமாகக் கல்லறையிலேயே தங்கியுள்ளார். தொடர்ந்து மழை பெய்ததில் மரக்கிளை முறிந்து விழுந்ததில் அவர் அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் அவர் இறந்து கிடப்பதாக எண்ணி காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, டி.பி. சத்திரம்காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி அங்கு விரைந்து வந்து பார்த்த போது, அவர் உடலில் அசைவு இருப்பதை கவனித்துள்ளார்.
இதையடுத்து, சிறிதும் தாமதிக்காமல் யாரையும் எதிர்பார்க்காமல், அந்த நபரை தனது தோளில் தூக்கிக் கொண்டு வந்து, ஆட்டோவில் ஏற்றி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து அவரது உயிரை காப்பாற்றியுள்ளார். மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரியின் இந்த செயலுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மேலும், காவல்துறையின் இந்த துரித நடவடிக்கை நெகிழச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பால் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவரை காப்பாற்றிய பெண் காவல் ஆய்வாளருக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “சாலையோரம் விழுந்து கிடந்தவரின் உயிரைக் காக்க தூக்கிக்கொண்டு ஓடும் காவல்துறை ஆய்வாளர் ராஜேஸ்வரியின் கடமையுணர்ச்சி பிரமிப்பூட்டுகிறது. அவரது வீரமும், சேவையும் போற்றுதலுக்குரியவை. முன்னுதாரண அதிகாரிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
0
0