ஒன் டிரில்லியன் டாலர் பொருளாதாரம்: முதல்வருக்கு கமல்ஹாசன் பாராட்டு

21 July 2021, 11:04 pm
Quick Share

சென்னை: தமிழகத்தை ஒரு லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக உருவாக்குவதாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இந்த இலக்கை மக்கள் நீதி மய்யம் தான் முதலில் முன்வைத்தது என அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொழில்துறை சார்பில் ‘முதலீட்டாளர்களின் முதல் முகவரி – தமிழ்நாடு’ விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தொழில்துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, தொழில்துறை முதன்மை செயலாளா் முருகானந்தம், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பூஜா குல்கா்னி உள்ளிட்ட தமிழக அரசின் முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது, மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.17,141 கோடி முதலீட்டில் 35 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. 55 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆட்டோமொபைல், காற்றாலை, எரிசக்தி, சரக்குப் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. கேப்பிட்டல் லாண்ட், அதானி, ஜே.எஸ்.டபிள்யூ உள்ளிட்ட நிறுவனங்கள் தமிழக அரசுடன் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. மேலும், இந்த நிகழ்ச்சியின் வழியே ரூ.4,250 கோடி மதிப்பில் 9 தொழில் திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார் ரூ.7,117 கோடி மதிப்பிலான 5 திட்டப் பணிகளை முதலமைச்சர் தொடங்கிவைத்தார். கூட்டத்தில் முதலமைச்சர் மு.கஸ்டாலின் பேசுகையில், புதிய திட்டங்கள் மூலமாக நேரடியாகவும், மறைமுகமாகவும் 83,432 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என கூறினார்.

மேலும், “தெற்காசியாவிலேயே தொழில் புரிவதற்கு உகந்த மாநிலமாகத் தமிழகத்தை உயர்த்துவதே எங்களது அரசின் லட்சியம். 2030ஆம் ஆண்டுக்குள் ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தி கொண்ட பொருளாதாரமாக தமிழகத்தை உருவாக்குவதே, எங்கள் அரசின் குறிக்கோள். அந்த இலக்கை நோக்கிப் பயணிக்க, முதலீட்டாளர்கள் ஒத்துழைப்பை வழங்க வேண்டும்” என்று கூறியிருந்தார். இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவிக்கையில், ‘இதனை தங்கள் கட்சி தான் முதலில் முன்வைத்தது,’ என கூறியுள்ளார்.

கமல்ஹாசனின் டுவிட்டர் பதிவில், “தமிழகத்தை ஒன் டிரில்லியன் பொருளாதாரமாக மாற்ற வேண்டும், மாற்ற முடியும் எனும் இலக்கினை முதன் முதலில் முன்வைத்த கட்சி மக்கள் நீதி மய்யம். இப்போது தமிழக முதல்வரும் 2030-ல் அந்த இலக்கை எட்டும் பாதையைத் தேர்ந்துள்ளார் என்பதில் மகிழ்கிறேன்.” என பதிவிட்டுள்ளார்.

Views: - 40

0

0