தன்னை நம்பி வந்த பெண்களை காப்பாற்றதவர் கமல்..! : நடிகர் ராதாரவி பிரச்சாரம்

Author: Udhayakumar Raman
22 March 2021, 10:16 pm
Quick Share

கோவை: தன்னை நம்பி வந்த பெண்களை காப்பாற்ற இயலாத கமல்ஹாசன் எப்படி மக்களை காப்பாற்றுவார் எனவும் கமல்ஹாசன் திமுகவின் பி டீம் என நடிகர் ராதாரவி கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசன் ஆதரித்து பேசியுள்ளார்.

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் ஆதரித்து நடிகர் ராதாரவி பிரச்சாரம் செய்தார். காந்திபுரம் 100 ஆடி ரோட்டில் வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாக கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து நடிகர் ராதாரவி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், தான் இங்கு நடிகனாக தான் வந்திருப்பதாகவும், கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசன் அவர்கள் போட்டியிடுவதை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்வது தனது கடமைகளில் ஒன்று என்று தெரிவித்தார்.

தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் நேர்மை அற்றவர் என்றும் தனது தனிப்பட்ட வாழ்விலேயே தன்னை நம்பி வந்த பெண்களை காப்பாற்றாமால் கைவிட்டவர் எப்படி மக்களை காப்பாற்றுவார் என்று கேள்வி எழுப்பினார். வானதி சீனிவாசனின் ஓட்டு வங்கியை பிரிப்பதற்காக திராவிட முன்னேற்றக் கழகத்தின் “பி டீம்” ஆக கமல் ஹாசன் செயல்படுவதாக குற்றம்சாட்டினார். கம்யூனிஸ்டுகள் 27 கோடி ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு திமுக கூட்டணியில் இருப்பதாகவும் காங்கிரஸ் தனது செல்வாக்கை இழந்து பல வருடங்கள் ஆகிவிட்டது என்று விமர்சித்தார்.

சுயமாக சிந்தித்து பேச முடியாமல் பேப்பரில் எழுதி வைத்து அதைப் பார்த்து படிபவர்தான் ஸ்டாலின், வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக தோல்வி அடையும் என்றார். 69 ஆண்டு காலமாக திராவிடத்தை சுவாசித்துக் கொண்டு இருந்தவர்கள் தற்பொழுது தேசியத்தை சுவாசிக்க வெளியே வந்துள்ளோம் என்றார். இஸ்லாமிய சமூகத்தினரின் நண்பனாக தன்னைக் காட்டிக்கொள்ளும் திமுக உண்மையில் இஸ்லாமியர்களுக்கு எதிரான போக்கையே கடைபிடித்து வருகிறது என்று குற்றம் சாட்டினார்.

குடியுரிமை திருத்த சட்டம் போன்ற சட்டங்கள் அவசியம் தேவை என்றும் அதன் மூலமாகத்தான் இந்தியாவில் இருக்கும் வேற்று நாட்டவரை கண்டறிய முடியும், இதைப்போன்ற பல அரிய சட்டங்களை மோடி அவர்கள் தான் கொண்டு வந்தார் என்று கூறினார். வரும் தேர்தலில் வானதி சீனிவாசன் அவர்கள் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார், கமல்ஹாசன் போன்றோர் மக்கள் ஆதரிக்க கூடாது என்று நடிகர் ராதாரவி தெரிவித்தார்.

Views: - 73

0

0