கானா பாடலால் சிக்கிய காஞ்சிபுரம் ரவுடிகள் : கோவாவில் கதறல்!!

21 September 2020, 4:38 pm
Kanchipuram Rowdies - updatenews360
Quick Share

காஞ்சிபுரம் : யூடியூபில் கானா பாடலை வெளியிட்டு தொழிலதிபர்கள் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்திய பிரபல ரவுடிகளை கோவா மாநிலத்தில் காஞ்சிபுரம் மாவட்ட தனிப்படை சுற்றிவளைத்து கைது செய்தனர்.

கோவில்கள் நிறைந்த நகரம் என பெயர் பெற்ற காஞ்சிபுரம் நகருக்கு பட்டு சேலை வாங்கவும் சுற்றுலா தளங்களுக்கு செல்லவும் கோயில்களுக்குச் சென்று வழிபடவும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த நகர் கடந்த சில ஆண்டுகளாக ரவுடிகளின் கூடாரமாக மாறிவிட்டது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபல தாதா ஸ்ரீதர் தனபால் கம்போடியா நாட்டில் சயனைடு சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதன் பின்னர் அந்த இடத்தை பிடிப்பதற்காக ஸ்ரீதரின் கார் ஓட்டுனர் தினேஷும் ஸ்ரீதரின் மைத்துனர் தணிகாவும் 2 கோஷ்டிகளாக பிரிந்து காஞ்சிபுரத்தில் பல குற்றச் செயல்களை செய்து வந்தனர்.

குறிப்பாக பைனான்சியர் கருணாகரன் கொலை வழக்கு , வழக்கறிஞரை ஓட ஓட விரட்டி கொன்ற வழக்கு , சுங்குவார்சத்திரம் அருகே பைக்கில் சென்ற இரண்டு ரவுடிகளை வெடிகுண்டு வீசி கொன்ற வழக்கு, தொழிலதிபர்களிடம் மிரட்டி பணம் பெறுவது ,கஞ்சா மொத்த விநியோகம் போன்ற பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினேஷ் மீது அவ்வப்போது குண்டர் சட்டம் பாய்ந்தாலும் வழக்கறிஞர்களை வைத்து சில மாதங்களிலேயே வெளியே வந்து மறுபடியும் குற்றச்செயல்களை செய்து வருகிறார். இவருக்கு துணையாக பொய்யா குளம் பகுதியை சேர்ந்த தியாகு என்ற ரவுடி இணைந்துள்ளதால் காஞ்சிபுரம் நகரில் அவ்வப்போது ஆங்காங்கே வெட்டுக்குத்து போன்ற சம்பவங்கள் நடைபெற்று வந்த வண்ணம் உள்ளது.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு வீரலட்சுமி என்ற சூப்பர் மார்க்கெட்டின் உரிமையாளரிடம் 10 லட்ச ரூபாய் பணம் கேட்டு தினேஷ் மற்றும் தியாகு மிரட்டியுள்ளனர். அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தினேஷின் ஆதரவாளர்கள் மூன்று பேரை காவல்துறை கைது செய்தது. தினேஷ், தியாகு மற்றும் அவர்களுடைய ஆதரவாளர்கள் அனைவரும் தப்பித்து கோவா மாநிலம் சென்று அங்கு ஒரு லாட்ஜில் அறை எடுத்து பதுங்கி இருந்தனர்.

இந்தக் கூட்டத்தில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பிரபல ரவுடி சுரேந்திரன் என்பவருடன் சேர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு தினேஷின் பிறந்தநாள் விழாவை ஜெகஜோதியாக கொண்டாடி உள்ளனர் . அப்போது ஸ்ரீதரின் மைத்துனரான தணிகாவை ஒழிக்க முடிவெடுத்தனர். மேலும் காஞ்சிபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் குற்ற செயல்களை புரிய திட்டமிடப்பட்டது.

இதுமட்டுமல்லாமல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலை உரிமையாளர்கள், தொழிலதிபர்கள் போன்றவர்களை மிரட்டவும் பொதுமக்களை அச்சுறுத்தவும் பிரபல ரவுடிகள் ஒன்றாக சேர்ந்து கானா பாடல் ஒன்றை யூடியூபில் வெளியிட்டுள்ளனர் .அதில் தினேஷ் ,தியாகு உள்ளிட்ட ஆறு நபர்கள் வசம் காஞ்சிபுரம் மாவட்டம் வந்துள்ளதாகவும் இனிமேல் நாங்கள் டாண் என்றும் வருகின்ற பாடல் வரிகளை கண்டு தொழிலதிபர்களுக்கு பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் சாமுண்டீஸ்வரி அவர்களின் கருத்துருபடி ரௌடிகளின் கூட்டத்தை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு ரவுடிகளை களை எடுக்கும் பணி விரிவுபடுத்தப்பட்டது. தினேஷ் மற்றும் தியாகு என அனைவரும் கோவாவில் தங்கி குற்றச் செயலுக்கு திட்டமிடப்படும் தகவலை உளவுத்துறை மோப்பம் பிடித்தது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா தலைமையிலான தனிப்படை கோவா விரைந்து சென்று அங்கு மாறுவேடத்தில் தங்கி இருந்து இவர்களின் நடமாட்டத்தை கண்டறிந்தது. நேற்று காலை தினேஷ், தியாகு உள்ளிட்ட 20 ரவுடிகளையும் துப்பாக்கி முனையில் தனிப்படை அதிரடியாக சுற்றி வளைத்து கைது செய்தது. அவர்கள் வைத்திருந்த பயங்கர ஆயுதங்களையும் பறிமுதல் செய்து அவர்கள் அத்தனை பேரையும் டெம்போ வேன் மூலம் கோவாவில் இருந்து காஞ்சிபுரத்துக்கு கொண்டு வந்தனர்.

அனைத்து காவல் நிலையங்களிலும் இவர்கள் மீது வழக்குகள் உள்ளதால் அந்தந்த காவல் நிலைய ஆய்வாளர்கள் அந்த அந்த பகுதியை சேர்ந்த ரவுடிகளை தங்கள் கஸ்டடிக்கு கொண்டு சென்றனர் .அதேபோல் கடலூர் மாவட்ட ரவுடி சுரேந்திரன் ஐ அந்த மாவட்ட காவல்துறையினர் நேரில் வந்து அழைத்துச் சென்றனர்.

தினேஷ் மற்றும் தியாகு ஆகியோர் மீது கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் ,கட்ட பஞ்சாயத்து ,வெடிகுண்டு வீசி தாக்குதல் ,துப்பாக்கி முனையில் மிரட்டுதல் போன்ற ஏராளமான வழக்குகள் உள்ளதால் இவர்கள் சிறையில் இருந்து வெளி வராத அளவுக்கு இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் வைத்தனர்.

Views: - 43

0

0