காவல்துறையை “ஷேக்“ ஆக வைத்த பிரபல ரவுடி ஷேக் காதர் கைது! சினிமா பட பாணியை போல நடந்த சம்பவம்!!

5 August 2020, 12:13 pm
Kanchi Rowdy Arrest - Updatenews360
Quick Share

காஞ்சிபுரம் : 5 வருடமாக காவல்துறைக்கு தண்ணி காண்பித்த, பல வழக்குகளில் தொடர்புடைய, வெடிகுண்டு கையாளுவதில் பலே கில்லாடியான ஷேக் காதர் என்ற ரவுடியை காஞ்சிபுரம் மாவட்ட தனிப்படை நேற்று அதிரடியாக கைது செய்தது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட தாதா ஸ்ரீதர் கம்போடியா நாட்டில் சயனைட் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆள் பலம் அதிகம் கொண்ட ஸ்ரீதரை காலி பண்ணும் அளவுக்கு வெடிகுண்டு தயாரிப்பில் பலே கில்லாடியான சேக் காதர் முயற்சி செய்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தாதா ஸ்ரீதர் மறைவுக்குப் பின்னர் அவனுடைய வாகன ஓட்டுனர் தினேஷ் என்பவன் ஆள் கடத்தல் கட்டப்பஞ்சாயத்து கொலை என செய்து ஸ்ரீதர் இடத்தைப் பிடிக்க முயற்சி செய்தான் . இவனுடன் பொய்யாகுளம் பகுதியை சேர்ந்த தியாகு என்பவனும் சேர்ந்துகொண்டு காஞ்சிபுரம் மாவட்டத்தை பதட்டத்தில் வைத்துக் கொண்டிருந்தனர்.

காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்த கண்ணன் மற்றும் சாமுண்டீஸ்வரி ஆகிய இருவரும் சேர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட ரவுடிகளை கைது செய்து சிறையில் அடைத்தனர். தினேஷ் உட்பட பலர் மீது குண்டர் சட்டம் பயந்தது. இவ்வளவு நடவடிக்கை எடுத்தும் சேக் காதர் என்பவன் மட்டும் காவல்துறையிடம் மாட்டாமல் தினேஷ் மற்றும் தியாகு போன்றவர்களுக்கு உதவி செய்து வந்தான்.

இவர்களுக்கு துணையாக வெடிகுண்டு தயாரிப்பில் கைதேர்ந்த சேக் காதர் என்பவன் யாருக்கும் தெரியாமல் கொலை செய்யும் நபரின் இடத்திற்கு முதலில் சென்று வெடிகுண்டை வீசிவிட்டு தப்பி விடுவான் . பின்னர் தினேஷின் ஆட்கள் அந்த குறிப்பிட்ட நபரை கண்டந்துண்டமாக வெட்டி சாய்த்துவிட்டு தப்பி விடுவார்கள் .

இதே போல் பல வழக்குகள் உள்ள நிலையில் கடந்த வருடம் திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு என்ற இடத்தில் காஞ்சிபுரத்தை சேர்ந்த ரவுடி ஜீவா மற்றும் சுப்பிரமணியம் ஆகிய இரண்டு நபர்களை வெடிகுண்டு வீசி கொலை செய்த வழக்கிலும், தாமல் ஊராட்சியில் கிளார் பகுதியில் துளசிராமன் என்ற ரவுடியின் பம்புசெட்டில் ஏகப்பட்ட வெடிகுண்டுகள் , மற்றும் துப்பாக்கி பதுக்கி வைக்கப்பட்டிருந்த வழக்கிலும் , காஞ்சிபுரம் வணிகர் வீதியில் கருணாகரன் என்ற ஸ்ரீதரின் தம்பியை வெடிகுண்டு வீசி கொலை செய்த வழக்கிலும் சேக் காதர் சம்பந்தப்பட்டு உள்ளான். இவன் மீது ஏகப்பட்ட வழக்குகள் நீண்டு கொண்டே செல்கின்றது.

கடந்த 5 வருடமாக அனைத்து கொலை முயற்சியிலும் சேக் காதரின் பங்கு இருந்தாலும் காவல்துறையினரிடம் மாட்டாமல் தப்பித்துக் கொண்டே இருந்தான் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது . அப்படிப்பட்ட மிக முக்கிய வெடிகுண்டு தயாரிப்பில் கைதேர்ந்த பயங்கர குற்றவாளியான சேக் காதரையும் , அதேபோல் ரவுடி தியாகுவின் தம்பி சந்தோஷ் என்பவனையும் காஞ்சிபுரம் மாவட்ட தனிப்படை நேற்று இரவு திருவான்மையூர் பகுதியில் வைத்து அதிரடியாக கைது செய்து காஞ்சிபுரம் கொண்டு வந்து தீவிர விசாரணை செய்து வருகின்றார்கள் .

சேக் காதரை தீவிரமாக விசாரணை செய்தால் பல உண்மைகள் வெளியே வரும் என காவல்துறையினர் எதிர்பார்த்து காத்துள்ளனர். சினிமா பட பாணியை போல பல வழக்குகள் உள்ள குற்றவாளி பல நாள் கழித்து சிக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 32

0

0