குளிர்சாதனப் பெட்டிகள் பழுது… சடலங்கள் அழுகி சுகாதார சீர்கேடு : காஞ்சி அரசு மருத்துவமனையின் அவலம்.. பொதுமக்களுக்கு வேதனைக்கு மேல் வேதனை..!!

Author: Babu Lakshmanan
21 September 2022, 4:09 pm
Quick Share

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையின் பிணவறையில் உள்ள 6 குளிர்சாதனப் பெட்டிகளும் பழுதடைந்து, சடலங்கள் அழுகி சுகாதாரக் கேடு ஏற்படும் அவலம் உருவாகியுள்ளது.

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு நாள் ஒன்றுக்கு உள்நோயாளிகள் மற்றும் புறநோயாளிகள் என ரெண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சுமார் 200 கிராமங்களில் இருந்து வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்கொலைகள் செய்து கொண்டவர்களின் சடலங்களும், சென்னை , பெங்களூரு, திருப்பதி, பாண்டிச்சேரி ,செங்கல்பட்டு மார்கங்களில் தேசிய, மாநில, மாவட்ட சாலைகளில் விபத்துகளில் உயிரிழந்தவர்களின் சடலங்களும் என நாள் ஒன்றுக்கு சுமார் 10 சடலங்களுக்கு மேல் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு வருகின்றது.

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையின் பிணவறையில் உள்ள ஆறு குளிர்சாதன பெட்டிகளும் கடந்த ஒரு வார காலமாக பழுதடைந்து, அதில் வைக்கப்பட்டுள்ள சடலங்கள் அனைத்தும் அழுகி துர்நாற்றம் வீசி சுகாதாரக் கேடு ஏற்பட்டதை தொடர்ந்து, அங்கிருந்த சடலங்கள் அனைத்தும் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பப்படுகிறது.

அரசு தலைமை மருத்துவமனையிலேயே குளிர்சாதனப் பெட்டிகள் பழுதடைந்து, அதை ஒரு வார காலமாக சீர்படுத்த முடியாமல் மருத்துவமனை நிர்வாகம் மெத்தன போக்கை கடைபிடித்து நோயாளிகளையும், உறவினர்களையும் அங்கேயும், இங்கேயும் என அலைய விடுகிறது.

விபத்துகளிலும், தற்கொலைகளிலும் இறந்து போனவர்களின் சடலங்களைக் வைத்து கொண்டு கடும் சோகத்தில் ஆழ்ந்துள்ள உறவினர்களை, செங்கல்பட்டுக்கும் ஸ்ரீபெரும்புதூக்கும் அலய விடுவது எந்த விதத்தில் நியாயம் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

Views: - 293

0

0