அரசு பள்ளி ஆசிரியர் வீடு உள்பட அடுத்தடுத்த 2 வீடுகளில் கொள்ளை : ரூ.30 லட்சம் மதிப்பிலான நகைகள் அபேஸ்..!!!

Author: Babu Lakshmanan
26 April 2022, 1:57 pm
Quick Share

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே அரசு பள்ளி தலைமை ஆசிரியர் உட்பட அடுத்தடுத்த இரண்டு வீடுகளின் பூட்டை உடைத்து 30 லட்சம் மதிப்பிலான 75 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலை அடுத்த கோணம்காடு பகுதியை சேர்ந்தவர் மரிய பிரான்சிஸ். தாழக்குடி அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மேரி. இவரும் இரணியல் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இருவரும் வழக்கம் போல் நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு பள்ளிக்கு பணிக்கு சென்றுள்ளனர்.

மாலை வீடு திரும்பிய நிலையில் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ந்த மரிய பிரான்சிஸ், வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, வீட்டின் மேஜை டிராயர்கள் மற்றும் பீரோ உடைக்கப்பட்ட நிலையில், காணப்பட்டதோடு அதில் இருந்த 18-லட்ச ரூபாய் மதிப்பிலான 45-சவரன் தங்க நகை மற்றும் 20 ஆயிரம் ரொக்கம் கொள்ளை போனது தெரியவந்தது.

இதனையடுத்து, கொள்ளை சம்பவம் குறித்து மரிய பிரான்சிஸ் குளச்சல் போலீசாருக்கு தகவலளித்த நிலையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது, தனியார் கம்பெனியில் மேலாளராக பணியாற்றும் அதே பகுதியை சேர்ந்த மரிய அருள்தாஸ் என்பவர் பணி முடிந்து வீட்டிற்கு வரும் வழியில், மரிய பிரான்சிஸ் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவத்தை அறிந்து வீட்டிற்கு வந்து, அவருக்கு ஆறுதல் கூறி தனது வீட்டிற்கு திரும்பினர்.

வீட்டிற்கு திரும்பிய மரிய அருள்தாஸ் சற்று நேரத்தில் தனது வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான 30 சவரன் நகைகள் கொள்ளை போயிருப்பதாக போலீசாருக்கு தகவலளித்தார்.

இதனை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் டி.எஸ்.பி தங்கராமன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தியதோடு, கொள்ளையர்கள் குறித்து துப்பு துலக்க மோப்ப நாய் ஏஞ்சல் வரவழைக்கப்பட்ட நிலையில், அது முதலில் தலைமை ஆசிரியர் மரிய பிரான்சிஸ் வீட்டில் இருந்து நேராக மரிய அருள்தாஸ் வீட்டிற்கும், பின்னர் அடுத்தடுத்த வீடுகளுக்கும் ஓடி சென்று கோணம்காடு பிரதான சாலையில் வந்து நின்றது.

இதனையடுத்து, கொள்ளையர்கள் இரண்டு வீடுகளில் கொள்ளையை அரங்கேற்றி அடுத்தடுத்த பூட்டிய வீடுகளிலும் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. கொள்ளையர்களை பிடிக்க காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் 3 தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்ட நிலையில், தனிப்படை போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

குமரியில் இரண்டு வீடுகளின் பூட்டை உடைத்து 75 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்த கொள்ளையர்கள் அடுத்தடுத்த வீடுகளிலும் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 774

0

0