பிச்சை எடுப்பதில் தகராறு : தமிழக யாசகரை கம்பால் அடித்துக் கொன்ற வடமாநில யாசகர்..!!

1 December 2020, 6:26 pm
kumari murder - updatenews360
Quick Share

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் யாசகம் எடுப்பவர்களிடையே ஏற்பட்ட மோதலில், தமிழக யாசகரை, வடமாநில யாசகர் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து விட்டது. கன்னியாகுமரி, நாகர்கோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெளி மாநிலங்களை சேர்ந்த பல நபர்களும், அதிகளவில் பிச்சை எடுத்து வருகின்றனர். பெரும்பாலும் இவர்கள் பிச்சை எடுத்த பின், வடசேரி பேருந்து நிலையம், நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம் மட்டுமல்லாமல், நகரப்பகுதிகளில் அமைந்திருக்கக் கூடிய பேருந்து நிறுத்தங்களிலும் இரவு நேரங்களில் தங்கி விடுகின்றனர்.

இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த காவி உடை அணிந்த நபர் ஒருவர் இன்று நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி அருகாமையில் பிச்சை எடுத்து வந்துள்ளார். இவர் பிச்சை எடுக்கும் பகுதியில் மற்றொரு நபரும் தொடர்ந்து பிச்சை எடுத்து வந்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு இருக்கிறது. ஒருவர் தமிழிலும், ஒருவர் இந்தியிலும் பேசிய நிலையில், தொடர்ந்து இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி உள்ளனர். இதில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த நபர் தனது கையிலிருந்த கம்பால் அவரை நடுரோட்டில் அடித்து தள்ளி தாக்கி உள்ளார்.

இந்த சம்பவத்தில் தமிழில் பேசிய பிச்சைக்காரர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தகவலறிந்து வந்த வடசேரி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் பகுதியிலுள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பிச்சைக்காரரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 20

0

0