100 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போட்டு சாதனை.. மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்த பாஜகவினர்!!

Author: Babu Lakshmanan
21 October 2021, 5:50 pm
kumari bjp - updatenews360
Quick Share

கன்னியாகுமரி: இந்தியாவில் 100 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு சாதனை படைக்கப்பட்டதை முன்னிட்டு, ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் தெய்வசிகாமணிக்கு குமரி மாவட்ட பாஜகவினர் பொன்னாடை போர்த்தி நன்றி தெரிவித்தனர்.

இதேபோல மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கு இனிப்பு வழங்கியும், சால்வை அணிவித்தும் பாஜகவினர் நன்றி தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து முன்னாள் நகர்மன்ற சேர்மன் மீனாதேவ் கூறியதாவது:- இந்திய நாட்டை பார்த்து உலகமே வியக்கும் அளவில் 100 கோடி பேருக்கு காரொனா தடுப்பு ஊசி செலுத்தி உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது. கொரொனா தடுப்பூசி போடும் தொடக்க காலகட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பல சர்ச்சைகளை ஏற்படுத்தினார். அவ்வாறு அவர்கள் சர்ச்சை ஏற்படுத்தாமல் இருந்திருந்தால் இந்நேரம் இந்தியாவில் உள்ள அனைத்து தனிநபருக்கும் கொரோனா தடுப்பு ஊசி போட்டு முடித்திருக்க முடியும்.

இந்தியா 130 கோடி மக்கள் தொகை கொண்ட நாடு. எப்படி இவர்களால் அனைவருக்கும் தடுப்பூசி போட முடியும் என்று உலக நாடுகள் கூறின. ஆனால் உலகமே வியக்கும் வண்ணம் தற்போது நாட்டில் உள்ள 100 கோடிப் பேருக்கு இந்திய அரசு இலவசமாக தடுப்பூசி செலுத்தியுள்ளது. பிறரை போல் வாய்ஜாலம் காட்டாமல் தான் சொன்னதை செயல்படுத்திக் காட்டி பிரதமர் மோடி வரலாற்று சாதனை படைத்துள்ளார். பொது மக்கள் பெரும்பாலானோர் தற்போது முதல்கட்ட ஊசியை போட்டுள்ளனர். இதே ஆர்வத்தோடு இரண்டாவது கட்ட ஊசியையும் செலுத்திக் கொள்ள வேண்டும்.

தடுப்பூசி போடும் பணியில் அயராது உழைத்த மருத்துவர்கள் செவிலியர்கள் மருத்துவ பணியாளர்களுக்கு எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம், இவ்வாறு அவர் கூறினார்.

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்திலுள்ள தடுப்பூசி போடும் இடத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோரின் புகைப்படம் இருந்தது. இதை பார்த்த பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தியப் பிரதமர் மோடியின் புகைப்படத்தை அதில் வைக்க வேண்டும் என்று அவர்கள் கூறினர். தடுப்பூசி போடும் இடத்தில் இந்திய பிரதமர் மோடியின் புகைப்படம் வைக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என பாஜகவினர் தெரிவித்தனர்.

Views: - 479

0

0