கொரோனா தடுப்பூசி முகாமில் குளறுபடி…! பொதுமக்கள், அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதம்

19 June 2021, 12:45 pm
kumari vaccine - updatenews360
Quick Share

கன்னியாகுமரி : கொரோனா தடுப்பூசி பற்றிய முறையான அறிவிப்பு இல்லாததால், பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் தற்போது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1986 ஆக உள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக குமரி மாவட்டத்தில் தொடர்ந்து தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.ஆனால் மாவட்டத்தை பொருத்தவரை தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கிய நாள் முதல் ஏற்பட்டுவரும் குளறுபடிகள் காரணமாகவும், தடுப்பூசிகள் பற்றாக்குறை காரணமாகவும் எத்தனை மையங்கள் மற்றும் தடுப்பூசி இருப்பு குறித்த விவரங்கள் முழுமையாக அறிவிக்கப்படாததாலும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதும் வாக்குவாதத்தில் ஈடுபடுவது வாடிக்கையாக உள்ளது. தற்போது 2536 கோவி ஷீல்டு தடுப்பூசிகள் மற்றும் 1110 கோவாக்சின் தடுப்பூசிகள் வந்ததாக அறிவித்துள்ள மாவட்ட நிர்வாகம், மாவட்டம் முழுவதும் இன்று சனிக்கிழமை 13 சிறப்பு மையங்களில் தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் எந்தெந்த மையங்களில் எத்தனை தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன என்பதை அறிவிக்காததால் அனைத்து மையங்களிலும் பெருமளவில் பொதுமக்கள் கூட்டம் காணப்பட்டது. சமூக இடைவெளி இன்றி கூடிய பொதுமக்களின் கூட்டத்தால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.

இடலாக்குடி பகுதியில் உள்ள சதாவதானி செய்குத்தம்பி பாவலர் மேல்நிலைப்பள்ளியில் 250 தடுப்பூசி மட்டுமே இருப்பில் உள்ள நிலையில், அங்கு 1500க்கும் மேற்பட்டோர் சமூக இடைவெளி இன்றி கூடியதால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.

எட்டு முப்பது மணி அளவில் சிறப்பு மையத்திற்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் 250 டோஸ் மருந்து மட்டுமே இருப்பில் உள்ளதாக அறிவித்ததால், பல மணி நேரமாக நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மேலும் ஏமாற்றத்துடன் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Views: - 117

0

0