களையிழந்த சிப்பி மீன் சீசன்… குறைந்தளவு மீன்களே கிடைப்பதால் குமரி மீனவர்கள் கவலை…!!

Author: Babu Lakshmanan
11 November 2021, 11:52 am
Kumari fish - updatenews360
Quick Share

கன்னியாகுமரி : குமரி மாவட்டத்தில் சிப்பி மீன் சீசன் தொடங்கிய நிலையில், குறைந்தளவே மீன்கள் கிடைப்பதால் மீனவர்கள் கவலையடைந்துள்ளனர்.

குமரி மாவட்டத்தில் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட விசைப் படகுகளும், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் வள்ளங்களின் மூலமாக மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் கணவாய், இறால், சுறா, நெய் மீன், நெத்ததிலி, சாளை போன்ற மீன்களை பிடித்து வருகின்றனர். இந்த மீன் வகைகள் தவிர ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் தோடு எனப்படும் சிப்பி மீன்கள் பிடிக்கப்படுகிறது.

முத்துக்குளிக்கும் மற்றும் மூச்சுப் பயிற்சி பெற்ற மீனவர்கள் கடல் பகுதிகளில் நீருக்கு அடியில் சென்று பாறையில் ஒட்டியிருக்கும் சிப்பி மீன்களை எடுத்து வருகின்றனர். குமரி மாவட்டத்தில் குளச்சல், குறும்பனை, இணையம், மேல்மிடாலம் ஆகிய கடலோர கிராமங்களில் மீனவர்கள் சிப்பி மீன் எடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது குளச்சலில் சிப்பி மீன் சீசன் துவங்கியுள்ளது. குளச்சலை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் எடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், சிப்பி மீன் இந்த வருடம் குறைவாகவே கிடைத்துள்ளது. கரைக்கு எடுத்து வரப்பட்ட ஒரு பெட்டி சிப்பி மீன் ரூ.3,000 முதல் ரூ.4,000 வரை விலை போகின்றது. ஒரு பெட்டியில் 500 முதல் 600 எண்ணம் வரை சிப்பி மீன்கள் இருந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு வருடமாக சிப்பி மீன் குறைவாக கிடைப்பதால் மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர் .

இந்த வருடமும் சிப்பி மீன் சீசன் மீனவர்களுக்கு கை கொடுக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. வழக்கமாக சிப்பி மீன்களை ஏலம் எடுக்க கேரள வியாபாரிகள் வருகை தருகின்றனர். ஏனெனில் கேரள ஹோட்டல் மற்றும் மதுபார்களில் இந்தப் சிப்பி மீன் அமோக விற்பனையாகிறது. ஆனால், இந்த வருடம் கேரள வியாபாரிகள் வரத்தும் மிக குறைந்துள்ளது. இதனால் உள்ளூர் வியாபாரிகளே போட்டி போட்டு ஏலம் எடுத்து சென்றனர்.

Views: - 345

0

0