நேற்று கனிமவளம்… இன்று போக்குவரத்து ; குமரியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அடுத்தடுத்து சோதனை!!
Author: Babu Lakshmanan30 September 2021, 6:48 pm
கன்னியாகுமரி: குமரியில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நாகர்கோவில் லஞ்ச ஒழிப்புதுறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து கனிமவளங்கள் குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு கடத்தப்படுவதாக புகார்கள் எழுந்தது. இந்த கடத்தலுக்கு சோதனை சாவடிகளில் உள்ள போலீசார் உடந்தையாக இருப்பதாகவும், லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து நேற்று ஆரல்வாய்மொழி, களியக்காவிளை சோதனை சாவடிகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டு, கணக்கில் வராத 15,000 ரூபாயை கண்டு பிடித்தனர்.
மேலும், இதில் தொடர்புடைய மூன்று போலீசாரை மாவட்ட எஸ்.பி.பத்ரிநாராயணன் இன்று அதிரடியாக மாற்றினார்.
இந்நிலையில் இன்று ஆரல்வாய்மொழி அடுத்துள்ள பண்டாரவளையில் அமைந்துள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நாகர்கோவில் லஞ்ச ஒழிப்புதுறை டிஎஸ்பி பீட்டர்பால் தலைமையிலான போலீசார் மாலை 3 மணியிலிருந்து அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். இதில், தற்போது வரை ரூ.1 லட்சத்து 17 ஆயிரம் கணக்கில் வராத பணம் மீட்டதாக தெரிவந்துள்ளது. தொடர்ந்து அங்கு சோதனை நடைபெற்று வருகிறது.
குமரியில் அடுத்தடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அதிரடியால் மற்ற அரசுத்துறையில் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள், அலுவலர்கள் கடும் பீதியில் உள்ளனர்.
0
0