பைக்கை திருடும் போது சிக்கிய திருடன்.!கம்பத்தில் கட்டி வைத்து சரமாரி அடி!!

19 August 2020, 4:40 pm
Kanyakumari Theft - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : இறச்சகுளம் பகுதியில் அதிகாலையில் இருசக்கர வாகனங்களை திருட முயன்ற மூன்று திருடர்களில் சிக்கிய ஒருவனை அப்பகுதி மக்கள் மின்கம்பத்தில் கட்டி வைத்த தர்மஅடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் இறச்சகுளம் ராஜுவ் நகர் பகுதியை சேர்ந்தவர் அலைஸ் பாண்டியன். இவர் நேற்று தனது வீட்டின் முன்பு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை இவருடைய இருசக்கர வாகனத்தை மூன்று மர்ம நபர்கள் திருடி செல்வதை அப்பகுதி வழியாக வந்த சிலர் கண்டு கூச்சலிட்டனர்.

சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் திரண்டு வந்ததை கண்ட மர்ம நபர்கள் திருடிய வண்டியோடு தப்பி செல்ல முயன்றார்கள். இதில் ஒரு திருடன் நிலை தடுமாறி சாலையோரம் இருந்த குளத்தில் விழுந்து விட்டான்.மற்ற இரு திருடர்களும் தப்பி சென்று விட்டனர்.

குளத்தில் விழுந்த திருடனை பிடித்த பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு கொண்டு வந்து மின் கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர். மேலும் அவனிடம் விசாரணை செய்ததில் திருடன் பெருவிளை பகுதியை சேர்ந்த செல்வகுமார் ( வயது 20) என்றும் இவன் மீது இருசக்கர வாகன திருட்டு வழிப்பறி உட்பட பத்து மேற்ப்பட்ட வழக்குகள் உள்ளது என்றும் இவனுடன் வந்த இரண்டு திருடர்கள் மீதும் பல வழக்குகள் உள்ளது எனவும் தெரிய வந்தது .

மின் கம்பத்தில் திருடனை பிடித்து வைத்துள்ள தகவல் அறிந்து வந்த பூதப்பாண்டி போலிஸார் பொதுமக்களிடம் இருந்து திருடனை மீட்டு காவல்நிலையம் அழைத்து சென்றனர். தப்பி ஓடிய மற்ற இரு திருடர்களை பூதப்பாண்டி போலிஸார் தேடி வருகிறார்கள். போலிஸாரின் இரவு ரோந்து பணி இல்லாத காரணத்தால் இப் பகுதியில் இருசக்கர வாகன திருட்டு வழிப்பறி ஆடு மாடு திருட்டு என குற்ற செயல்கள் அடிக்கடி நடைபெற்று வருவதாகவும் இதனால் இரவில் வெளியே வருவதற்கே அச்சமாக உள்ளது என்றும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குற்றம் சாட்டினார்கள்.

எனவே இனிமேலாவது காவல்துறையினர் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுப்பட்டு குற்ற செயல்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என அச்சத்துடன் தெரிவித்தார்கள்.