தனியார் மருத்துவமனை மீது கல் வீசி தாக்குதல்.! பிரசவத்திற்கு வந்த பெண் பலி.!!
12 August 2020, 11:37 amகன்னியாகுமரி : கொட்டாரம் தனியார் ஆஸ்பத்திரியில் பெண் குழந்தையை பெற்றெடுத்த இளம்பெண் பிரசவித்த சில மணிநேரங்களில் பலியான சம்பவத்தில் தவறான சிகிச்சையளித்த மருத்துவமனையை சீல் வைக்கக்கூறி உறவினர்கள் மருத்துவமனை மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர்.
கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் காலேஜ் ரோடு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 29 ), சிங்கப்பூரில் உள்ள நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி பவித்ரா (வயது 26) நிறை மாத கர்ப்பிகணியான இவர் கொட்டாரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்காக கடந்த 9ம் தேதி மாலை அனுமதிக்கப்பட்டார்.
நேற்று காலை 7 மணிக்கு பிரசவ வலி எடுத்த பவித்ராவுக்கு பெண்குழந்தை பிறந்தது. ஆனால் சில நிமிடங்களிலேயே பவித்ராவுக்கு அதிகளவு இரத்தப்போக்கு ஏற்பட்டு உள்ளது . டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலனில்லாததால் ஆம்புலன்ஸ் மூலம் கன்னியாகுமரியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஆபத்தான நிலையில் இருப்பதால் வேறு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுமாறு கூறியதையடுத்து அங்கிருந்து ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார்.
பிரசவத்தின் போது இளம்பெண் இறந்தது தொடர்பாக கன்னியாகுமரி எம்எல்ஏ ஆஸ்டின் மற்றும் அகஸ்தீஸ்வரம் தாசில்தார் அப்துல்மன்னா ஆகியோர் பாதிக்கப்பட்ட பெண் சார்பாக ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இந்நிலையில் இன்று காலை குமரி ட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் ஜாண்பிரிட்டோ ஆஸ்பத்திரிக்கு வந்து பிரசவம் பார்த்த டாக்டர்கள் மற்றும் ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் ஆய்வு நடத்தினார்.
ஆஸ்பத்திரியில் விசாரணை நடத்திவிட்டு வெளியே வந்த இணை இயக்குனரின் காரை வெளியே விடாமல் பெண்ணின் உறவினர்கள் முற்றுகையிட்டு ஆஸ்பத்திரியை சீல் வைக்கவேண்டும் என்று ஆவேசமாக கூறினர். அப்போது கூட்டத்தில் நின்ற இளைஞர்கள் மற்றும் பெண்கள் மருத்துவமனை மீது கவ்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் ஆஸ்பத்திரியின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சிதறியது.
இதையடுத்து கன்னியாகுமரி சப்இன்ஸ்பெக்டர் அன்பரசு பொதுமக்களை சமாதானப்படுத்தி வெளியே அனுப்பினார். ரோட்டிற்கு வந்த இளைஞர்கள் ஆஸ்பத்திரியின் வாசலில் அமர்ந்து மறியல் செய்ததோடு அங்கிருந்த விளம்பர போர்டையும் ஆத்திரத்தில் உடைத்தனர். அப்போது அங்கு வந்த கன்னியாகுமரி டிஎஸ்பி பாஸ்கரன் மறியல் செய்த பொதுமக்களை சமாதானப்படுத்தி கலைந்து போது கூறியதையடுத்து அனைவரும் கலைந்துசென்றனர்.