கருணாநிதி, ஜெயலலிதாவை முந்திய எடப்பாடியார் : விவசாய கடன் தள்ளுபடியில் புதிய சரித்திரம்!!!
6 February 2021, 12:36 pmசென்னை : தமிழக அரசு தள்ளுபடி செய்துள்ள விவசாய கடன்களில் இதுவரை எந்த தலைவர்களும் செய்யாத அளவில் அதிகளவு கடன் தள்ளுபடி செய்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சாதனை படைத்துள்ளார்.
நேற்று நடந்த சட்டமன்ற கூட்டத்தில் நிலுவையில் உள்ள, கூட்டுறவு வங்கி விவசாய பயிர் கடன் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110 விதியின் கீழ் வேளாண் துறைக்கான புதிய அறிவிப்புகளை சட்டமன்றத்தில் வெளியிட்டார்.
அதில், வேளாண் துறை தொடர்பாக பல திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி வருவதாக தெரிவித்த முதலமைச்சர், விவசாயிகளுக்கு துயர் ஏற்படும் போது அம்மா அரசு உதவி வருகிறது என்று கூறினார். அதன்படி, 16.43 லட்சம் விவசாயிகள் பயன் பெறும் வகையில், சுமார் ரூ. 12,110 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படுகின்றது என்று முதலமைச்சர் அப்போது அறிவித்தார்.
தற்போது அனைத்து தரப்பு விவசாயிகளுக்கான பயிர் கடனை தள்ளுபடி செய்துள்ள நிலையில், தமிழகத்தில் அதிக கடன் தள்ளுபடி செய்த பெருமையை முதலமைச்சர் பழனிசாமி பெற்றுள்ளார்.
இதற்கு முன் கடந்த 1996 ஆம் ஆண்டில் கருணாநிதி ஆட்சி காலத்தில் வேளாண் கடன்களுக்கான அபராத வட்டி வீதத்தை தள்ளுபடி செய்தார். இதன் மூலம் சுமார் ரூ.20 கோடி மதிப்பிலான கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதன் பின்னர் கடந்த 1999ஆம் ஆண்டில் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி ஆட்சியில் பயிர் கடன்களுக்கான உரிய தேதிக்குள் செலுத்தவேண்டிய வட்டிகளை தள்ளுபடி செய்தார். அப்போதைய காலக்கட்டத்தில் 2000ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டிய விவசாயிகளின் கடன்களுக்கான வட்டி தொகை சுமார் ரூ.36 கோடி தள்ளுபடி செய்யப்பட்டது.
இதன் பின் கடந்த 2001ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் விவசாயிகளின் பயிர் கடன்களுக்கான வட்டி மற்றும் அபராத வட்டியையும், 2000ஆம் ஆண்டு நவம்பர் மாதம் விவசாயிகள் செலுத்த வேண்டிய நிலுவையில் உள்ள கடன் தொகை என சுமார் ரூ.311 கோடி கடன்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த தொகைதான் தமிழக அரசு, விவசாய பயிர் கடன்களை அதிக அளவு தள்ளுபடி செய்த தொகையாக இருந்தது.
இதன் பின்னர் கடந்த 2003ஆம் ஆண்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா விவசாய பயிர் கடன்களுக்கான இடைக்கால தள்ளுபடி செய்ய உத்தரவிட்டார். சுமார் ரூ.61 கோடி மதிப்பிலான பயிர் கடன்கள் இடைக்கால தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து 2004ஆம் ஆண்டிலும் சுமார் ரூ.62 கோடி மதிப்பிலான பயிர் கடன்கள் இடைக்கால தள்ளுபடி செய்யப்பட்டது. மீண்டும் அதே ஆண்டில் பயிர் கடன்களை மறு சீரமைப்புக்காக சுமார் ரூ.645 கோடி மதிப்பில் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து கடந்த 2006ஆம் ஆண்டில் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி, விவசாயிகள் கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடன்களுக்கான வட்டி மற்றும் நிலுவைத் தொகையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதன் மதிப்பு சுமா ரூ.7000 கோடியாக இருந்தது. இதுவே தமிழக அரசு, விவசாய கடன்களை அதிக அளவு தள்ளுபடி செய்த தொகையாக இருந்தது.
இந்த அறிவிப்பு கருணாநிதி மீண்டும் ஆட்சிய அமைய ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அதிமுக கூட்டணி கட்சிகளை மிரள வைத்த கருணாநிதியின் தேர்தல் அறிக்கையில், அனைத்து ரேஷன் கார்டுகளுக்கு வண்ணத்தொலைக்காட்சி பெட்டி என அறிவித்ததால் அந்த தேர்தலில் அவர் வெற்றி பெற்றிருந்தார்.
இதன் பின்னர் மீண்டும் 2009 ஆம் ஆண்டில் அனைத்து பயிர் கடன்களையும் உடனடியாக செலுத்துவதற்கான முழு வட்டி தள்ளுபடி செய்யப்பட்டது. சுமார் ரூ.140 கோடி மதிப்பில் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து 2016ஆம் ஆண்டில் மீண்டும் அரியணை ஏறிய முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கான நிலுவையில் உள்ள பயிர் கடன்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். குறுகிய கால பயிர் கடன்கள், நடுத்தர கால விவசாயம் மற்றும் நீண்ட கால பண்ணை கடன்கள் என சுமார் ரூ.5,318.73 கோடி கடன்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதையெல்லாம் தாண்டி தற்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ள சுமார் ரூ. 12,110 கோடி விவசாய பயிர் கடன் தள்ளுபடியே தமிழக அரசு தள்ளுபடி செய்த விவசாய பயிர்கடன்களில் அதிக தொகையாகும்.
இதன் மூலம் தமிழகத்தை ஆண்ட ஆளுமை தலைவர்களான ஜெயலலிதா மற்றும் கருணாநிதியை பின்னுக்குத் தள்ளி எடப்பாடி பழனிசாமி தனி முத்திரை பதித்துள்ளார். ஏற்கனவே கடந்த 2006ஆம் ஆண்டில் கருணாநிதி ஆட்சியில் செய்த கடன் தள்ளுபடியே அதிகம் என இருந்த நிலையில், தற்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ள இந்த கடன் தள்ளுபடி எதிர்க்கட்சிகளை மிரள வைத்துள்ளது.
2006ஆம் ஆண்டு கருணாநிதி மீண்டும் முதலமைச்சராக பதவியேற்க விவசாய பயிர் கடன் தள்ளுபடி மற்றும் தொலைக்காட்சி பெட்டி அறிவிப்பு போன்ற அறிவிப்புகள் முக்கிய காரணமாக அமைந்தது. அதே போல வரும் 2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவித்துள்ள இந்த அறிக்கையால் மீண்டும் அவர் அரியணை ஏறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விவசாயிகள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ள முதலமைச்சர் பழனிசாமி மீண்டும் தமிழகத்தை ஆளுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
0
0