பாஜகவின் புதிய தலைவர் நியமனக் கொண்டாட்டம்… போலீசார் – பாஜகவினர் இடையே தள்ளுமுள்ளு..!!

9 July 2021, 5:35 pm
Quick Share

கரூர் : கரூரில் பாஜக மாநில தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டதற்கு இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாடிய நிகழ்வின் போது பாஜகவினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

கரூர் மாவட்டத்தை சார்ந்த அண்ணாமலை பாஜக மாநில தலைவராக நேற்று அறிவிக்கப்பட்டார். இதனை கொண்டாடும் விதமாக, கரூர் பேருந்து நிலையம் அருகில் பாஜக சார்பில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்க இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பேருந்து நிலையம் அருகில் திரண்ட பாஜக தொண்டர்களும், நிர்வாகிகளும் மாவட்ட தலைவர் சிவசாமிக்காக காத்திருந்தனர்.

இதற்கிடையில் பாஜகவினர் இரு சக்கர வாகன பேரணி செல்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மாவட்ட தலைவர் சிவசாமி உள்ளிட்ட பொறுப்பாளர்கள், தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்தும், இனிப்பு வழங்கி கொண்டாடினர். அப்போது அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு இருந்தது.

அந்த சமயம் அங்கு காரில் வந்த மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் அனைவரையும் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டுச் சென்றார். இதனை தொடர்ந்து, உரிய அனுமதி இன்றி பட்டாசு வெடித்தது, போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியதற்காக போலீசார் பாஜகவினரை கைது செய்வதாக கூறி அவர்களை வாகனத்தில் ஏறும்படி அறிவுறுத்தினர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் அனைவரையும் உடனடியாக கைது செய்ய போலீசாரை சத்தமிட்டார்.

ஆனால், அவர்கள் வர மறுத்ததால் மாவட்ட தலைவர் சிவசாமியை போலீசார் வலுக்கட்டாயமாக தள்ளிக் கொண்டு போய் வாகனத்தில் ஏற்ற முயன்றனர். அப்போது போலீசாருக்கும், பாஜகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து எங்களை கைது செய்தால், மாவட்ட முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும், மாநிலம் முழுவதும் பிரச்சினையை கிளப்புவோம் என தெரிவித்ததை அடுத்து, அவர்களை போலீசார் கைது செய்யாமல் விட்டு விட்டனர். இதனால், அனைவரும் கலைந்து சென்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஆட்சியர் உத்தரவிட்டும், காவல் கண்காணிப்பாளர் சம்பவ இடத்தில் இருந்தும் பாஜகவினரை கைது செய்ய முடியாத நிலை ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 188

0

0