குளம் போல காட்சியளிக்கும் கரூர் புத்தகத் திருவிழா அரங்கு… இதுல புதிய பேருந்து நிலையம் வேற… கவனம் எடுப்பாரா முதலமைச்சர் ஸ்டாலின்..?

Author: Babu Lakshmanan
27 August 2022, 3:53 pm
Quick Share

கரூரில் நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக, அங்கு நடந்து வரும் புத்தகத் திருவிழா அரங்கத்தில் குளம் போல வெள்ளம் சூழந்திருப்பது சமூக ஆர்வலர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டத்தில் முதன் முறையாக புத்தகத் திருவிழா மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்று வருகிறது. கடந்த 19ம் துவங்கிய இந்த திருவிழா காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற்று வருகிறது. 115 அரங்குகள் அமைக்கப்பட்ட லட்ச கணக்கான தலைப்பில் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றை ஏராளமான புத்தகப் பிரியர்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்று வருகின்றனர்.

பகல் நேரங்களில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் பார்வையிட அழைத்து வர ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் நேற்று இரவு மழை பெய்தது. கரூர் நகரப் பகுதியான ஜவகர் பஜார், ராயனூர், வெங்கமேடு, பசுபதிபாளையம், புலியூர், சுங்ககேட், தாந்தோணி மலை காந்திகிராமம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பலத்தை இடியுடன் கூடிய கன மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகினர்.

இந்த மழையின் காரணமாக புத்தக கண்காட்சியில் மழைநீர் சூழ்ந்து குளம் போல் காட்சியளிக்கிறது. உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமுக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக, அந்த அரங்கை சுற்றியுள்ள விவசாய நிலங்களில் வாய்க்கால் கவுர்களை உடனடியாக தூர்வார வேண்டும் என்று அப்பகுதியில் விவசாயிகளும் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இங்கு தான் புதிய பேருந்து நிலையம் வர இருப்பதாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இதே பகுதியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்க வந்திருந்த முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். எனவே, பேருந்து நிலையம் அமைப்பதற்கு முன்பாக, இங்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Views: - 503

0

0