டீக்குடிக்கும் நேரத்தில் கண்டெய்னர் லாரி அபேஸ்… சினிமா பட பாணியில் விரட்டிச் சென்று பிடித்த போலீஸார்..!!

13 July 2021, 6:47 pm
karur lorry - updatenews360
Quick Share

சென்னை : கரூர் அருகே சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்டெய்னர் லாரியை திருடிச் சென்ற திருடனை, போலீசார் சினிமா பட பாணியில் மடக்கி பிடித்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சார்ந்தவர் வேல்சக்கய்யா. தர்மபுரியில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு உரம் தயாரிக்க மிகவும் தேவையான பதப்படுத்தப்பட்ட விஷ வெள்ளரிக்காய்களை ஏற்றிக் கொண்ட கண்டெய்னர் லாரியை ஓட்டுக் கொண்டு கரூர் வழியாக வந்தார்.

கரூர் அடுத்த சுக்காலியூர் பகுதியினை அடுத்த, ஆட்டையாம்பரப்பு அருகே கண்டெய்னர் லாரியை ஓரமாக நிறுத்திவிட்டு டீ கடைக்குச் சென்று டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென கண்டெய்னர் லாரியை யாரோ மர்ம நபர் ஒருவர் எடுத்துச் சென்றதைக் கண்ட ஓட்டுநர் வேல்சக்கையா மற்றும் டீக்கடை உரிமையாளர் உதவியுடன் அருகில் நின்றிருந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து, ரோந்து போலீசார் கண்டெய்னர் லாரியை சினிமா பட பாணியில் சுமார் 4 கி.மீட்டர் தூரம் விரட்டிச் சென்று புத்தாம்பூர் ஜவுளி பூங்கா அருகே மடக்கிப்பிடித்தனர். இது குறித்து கண்டெய்னர் லாரியை திருடிச் சென்ற சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள முனியாண்டிப்பட்டி ராம்ஜித்மலானி என்கிற (எ) ராமசந்திரன் (27) என்ற இளைஞரை கைது செய்து நெடுஞ்சாலை ரோந்து காவல்துறையினர் தாந்தோன்றிமலை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா பட பாணியில் பல லட்ச மதிப்பிலான பொருட்களுடன் இருந்த லாரியை திருடர்களிடமிருந்து காப்பாற்றி, அதை உரியவர்களிடம் ஒப்படைத்த பெருமை போலீசாருக்கு கிடைத்துள்ளது.

Views: - 194

0

0