கழிவுநீர் வடிகால் அமைப்பதில் அலட்சியம்… தம்பதி மீது கான்கிரீட் கலவை கொட்டிய விவகாரம் ; 12 நாள் போராட்டத்திற்கு பின்பு கிடைத்த தீர்வு

Author: Babu Lakshmanan
15 April 2023, 1:11 pm
Quick Share

கரூரில் கழிவு நீர் வடிகால் குழியில் இறங்கி கணவன், மனைவி போராட்டம் நடத்திய விவகாரம் பூதாகரமாகிய நிலையில், ஒப்பந்ததாரர் பணம் பெறாமல் கான்கிரீட் போட்டுச் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

கரூர் மாநகராட்சி 16வது வார்டு ஜே.ஜே நகர் பகுதியில் கழிவு நீர் வடிகால் கட்டுமான பணி கடந்த 12 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. கட்டுமான பணி நடைபெற்று வரும் இடத்தில், ஜேசிபி எந்திரத்தை கொண்டு குழி தோண்டும்போது சம்பந்தப்பட்ட வீட்டின் பக்கவாட்டு சுவர் அடித்தளம் பெயர்ந்து விழுந்துள்ளது.

இதன் காரணமாக வீடு வலுவிழந்ததால் உள் பக்கமாக மேற்கூறையை தாங்கி பிடிப்பதற்காக இரும்பு ஜாக்கிகள் அமைத்து பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பக்கவாட்டு சுவற்றில் கான்கிரீட் அமைக்க வீட்டு உரிமையாளரிடம் ஒப்பந்ததாரர் ரூபாய் 43,000 பணம் கேட்டதாக புகார் எழுந்தது.

பணத்தை கொடுக்காமல் கான்கிரீட் அமைக்க முடியாது என்று ஒப்பந்ததாரர் கூறிய நிலையில், வீட்டு உரிமையாளர்களான பாலசந்தர், கோமதி தம்பதிகள் இருவரும் கழிவு நீர் வடிகால் குழியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதை பொருட்படுத்தாமல் ஒப்பந்ததாரர் அவர்கள் மீது கான்கிரீட் சிமெண்ட் கலவையை கொட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஒப்பந்ததாரரிடம் அப்பகுதியில் காங்கிரிட் அமைத்து தரும்படி அறிவுறுத்திச் சென்றனர்.

இந்நிலையில் இன்று காலை அங்கு வந்த ஒப்பந்ததாரர் பாதிக்கப்பட்டவரின் வீட்டின் பக்கவாட்டுச் சுவரை ஒட்டிய பகுதியில் காங்கிரிட் போட்டு விட்டுச் சென்றனர். இதனால் கடந்த 12 நாட்களாக இருந்த பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது.

Views: - 252

0

0