காதல் மனைவிக்கு தொல்லை கொடுத்த நண்பன் : மதுவில் விஷம்… எமனாக மாறிய மதுவிருந்து… …!!

12 July 2021, 12:28 pm
karur murder - updatenews360
Quick Share

கரூரில் காதல் மனைவிக்கு நண்பனே காதல் தொல்லை கொடுத்ததால் மதுவில் விசம் கலந்து கொலை செய்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கரூர் நகராட்சிக்கு உட்பட்ட வடக்கு காந்தி கிராமம் பகுதியில் வசிப்பவர்கள் மோகன் (23), சசிகுமார். இவர்கள் இருவரும் கட்டிட தொழிலாளிகள். நேற்று மதியம் தனது நண்பர்களுடன் சேர்ந்து சணப்பிரட்டி அருகில் உள்ள காட்டுப் பகுதியில் கிளி பிடிப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது, தனது நண்பர்களோடு சேர்ந்து மது அருந்தியுள்ளனர். மோகன் குவாட்டரில் முதல் ரவுண்டும், சசிகுமார் பீரும் குடித்துள்ளனர். அப்போது அவர்கள் இருவருக்கும் நெஞ்சு எரிச்சல் வந்துள்ளது.

இதனை தொடர்ந்து அவர்களை அருகில் இருந்த நண்பர்கள் ஆன்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் மோகன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து மோகனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. ஆபத்தான நிலையில் இருக்கும் சசிக்குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த பசுபதிபாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில் உயிரிழந்த மோகனும், வடக்கு காந்தி கிராமம், பெரியார் நகரை சார்ந்த கட்டிட தொழிலாளி தர்மன் என்கின்ற கிருஷ்ணமூர்த்தியும் (23), 5 ஆண்டு கால நண்பர்கள். தர்மன் தாந்தோன்றிமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் போது தன்னுடன் படித்த பேபி ஷாலினியை காதலித்து கடந்த 4 வருடத்திற்கு முன்பு திருமணம் செய்துள்ளார். வேறு வேறு சமூகத்தை சார்ந்த அவர்களுக்கு 4 வயதில் ஆண் குழந்தை உள்ளது.

பேபி ஷாலினியும், உயிரிழந்த மோகனும் ஒரே சமூகத்தை சார்ந்தவர்கள் என்பதலும், ஒரே வயதுடையவர் என்பதாலும், பேபியை காதல் வலையில் வீழ்த்த முயற்சித்துள்ளான். பேபி ஷாலினி வீட்டிற்கு, தர்மன் இல்லாத போது வருவது, அவரை நோட்டமிடுவது போன்ற செயல்களில் மோகன் ஈடுபட்டு வந்துள்ளான். இதனை பேபி ஷாலினி கணவரிடம் இது தொடர்பாக கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தர்மன், மோகனை தீர்த்து கட்ட முடிவு செய்கிறார்.

கடந்த 9ம் தேதி இரவு காந்திகிராமத்தில் உள்ள டாஸ்மாக் ஒயின் ஷாப்பில் ஒரு குவாட்டரும், ஒரு பீரூம் வாங்கிக் கொண்டு வீட்டில் வைத்துள்ளார் தர்மன். அப்போது ஏற்கனவே தான் வைத்திருக்கும் வெள்ளி பிரேஸ்லெட்க்கு பாலிஸ் போட பயன்படும் சைனைடு (ஆசிட்) கலந்து வைத்துள்ளார். நேற்று வழக்கம் போல் அவர்கள் மது குடிக்கச் செல்லும் சணப்பிரட்டியில் காட்டுப் பகுதிக்கு நண்பர்களுடன் சென்றுள்ளனர். அப்போது மோகனும், தர்மனும் மது அருந்த தயாரான போது, சசிகுமாரை பீர் குடிக்க மோகன் அழைத்து வலுக்கட்டாயமாக குடிக்க வைத்துள்ளார்.

மோகன் கட்டிங்கில் தண்ணீர் கலந்து ஒரே அடியாக குடித்துள்ளார். சசிகுமார் பீரை வாயில் ஊற்றியவுடன் சுவை மாறியதால் துப்பி விட்டார். மோகன் மது குடித்த சிறிது நேரத்திலேயே நெஞ்சு எரிவதாக கூறி தரையில் படுத்து விட, அருகில் இருந்த மற்ற நண்பர்கள் ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்து வரவழைத்து ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அப்போது மோகந் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சசிகுமார் தற்போது ஆபத்தான கட்டத்தை தாண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் குற்றவாளி தர்மன் என்கின்ற கிருஷ்ணமூர்த்தியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Views: - 237

0

0