யாரு பெரிய ஆளுனு பாத்துக்குவோமா…? குடிபோதையில் அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு மிரட்டல் விடுத்த ஆசிரியர்… வைரலாகும் ஆடியோ!!!

Author: Babu Lakshmanan
21 May 2022, 5:06 pm
Quick Share

கரூர் : கரூரில் ஆசிரியர்கள் இருவருக்குள் ஏற்பட்ட தகராறினால், ஆசிரியரை மற்றொரு ஆசிரியர் மது போதையில் ஆபாச வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடும் ஆடியோ வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வாங்கல் சாலையில் மாநகராட்சி ஜெயப்பிரகாஷ் நடுநிலைப் பள்ளி. இப்பள்ளியின் சிறப்பு அம்சம் என்னெவென்றால் மகாத்மா காந்தியடிகள் விடுதலைப் போராட்ட காலத்தில் 1931ம் ஆண்டு இள்ளிக்கு வருகை தந்து ஒரு நாள் இரவு தங்கி சென்றுள்ளதாக செவி வழிச் செய்தியாக அறியப்படுகிறது.

1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை செயல்படும் இப்பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) இருப்பவர் ராஜலிங்கம். கணித ஆசிரியரான இவர், தலைமை ஆசிரியர் பொறுப்பையும் கவனித்து வருகிறார்.

இதே பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றும் செல்வம் என்பவருக்கும், பொறுப்பு தலைமை ஆசிரியர் ராஜலிங்கத்திற்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பொறுப்பு தலைமை ஆசிரியர் ராஜலிங்கம், மாவட்ட கல்வி அலுவலரிடம் எழுத்துபூர்வமாக புகார் அளிக்கப்பட்டதாக தெரியவருகிறது.

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு உடற்கல்வி ஆசிரியர் செல்வத்திற்கு ஆதரவாக பட்டதாரி ஆசிரியர் விஜயகுமார் என்பவர் ராஜலிங்கத்தை செல்போனில் தொடர்பு கொள்கிறார். மது போதையில் இருப்பது போன்று பேசும் அவர், ராஜலிங்கத்தை ஆபாச வார்த்தைகளால் திட்டியும், கொலை மிரட்டலும் விடுகிறார். இதை வேண்டும் என்றால் ரெக்கார்ட் செய்து வெச்சுக்கோ, இல்லை நானே ரெக்கார்ட் செய்து தருகிறேன் எனக் கூறி முடிகிறது ஆடியோ.

மாணவர்கள், மாணவிகள் பொது இடங்களிலும் சண்டை போட்டுக் கொள்வதை தொடர்ந்து தற்போது ஆசிரியர்களும் தங்கள் பங்கிற்கு சண்டை போட்டுக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. இரு சங்கங்களை சார்ந்த நிர்வாகிகள் தங்கள் சங்கம் தான் பெரியது என்பது போன்ற தோரனையில் பேசிக் கொள்ளும் இந்த ஆடியோ, தற்போது ஆசிரியர்கள், மாணவர்கள் மட்டும் அல்லாது பொதுமக்களிடமும் வாட்ஸ் அப் குழுக்களில் பகிரப்பட்டு வருகிறது.

Views: - 794

0

0