பெயர்பலகையை பறித்துக் கொண்டு ஓடிய போராட்டக்காரர்… குளித்தலை அரசு மருத்துவமனை முன்பு நடந்த போராட்டத்தில் நடந்த களேபரம்!!

Author: Babu Lakshmanan
27 June 2022, 8:19 pm
Quick Share

கரூர் : குளித்தலை அரசு மருத்துவமனையில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை என பெயர் பலகை வைக்க வலியுறுத்தி அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கரூர் மாவட்டம் குளித்தலை அரசு மருத்துவமனை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக செயல்படும் என தமிழக சட்டப்பேரவையில் சில மாதங்களுக்கு முன்பு சுகாதாரத்துறை அமைச்சர் அறிவித்திருந்தார். அதற்கு முன்னதாகவே, அதிமுக ஆட்சியில் அப்போதைய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கரூருக்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வந்ததையடுத்து, குளித்தலை பகுதியில் செயல்படும் அரசு மருத்துவமனை, கரூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக செயல்படும் என்று அறிவித்திருந்தார்.

ஆட்சி மாற்றத்தின் பின்னர், இணை மருத்துவமனை, துணை மருத்துவமனை என்றெல்லாம் கரூரிலும், தமிழக அளவிலும் பேச்சு வந்தது. ஆனால், கரூரில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, கரூரில் ஏற்கனவே இருந்த மருத்துவமனை புதுப்பொழிவுடன் கரூர் மாவட்ட தலைமை மருத்துவமனையாக இயங்கும், குளித்தலையில் இதற்கு இணையாக மருத்துவமனை இருக்கும் என்றும் உறுதி பட தெரிவித்தார்.

சட்டசபையில் அரசாணை வெளியிட்டும் தரம் உயர்த்துவதற்கு எந்தவித பணிகளை மேற்கொள்ளாமல் கரூரில் உள்ள பழைய அரசு மருத்துவமனையை மாவட்ட அரசு மருத்துவமனையாக செயல்படும் என்றும், குளித்தலை அரசு மருத்துவமனை மாவட்ட அரசு மருத்துவமனைக்கு இணையாக செயல்படும் என்று தகவல்கள் அதிகளவில் வெளியானதை அடுத்து, குளித்தலை பகுதியைச் சேர்ந்த அனைத்து கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் குளித்தலையில் தான் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை செயல்பட வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப் படவில்லை.

இதனையடுத்து, இன்று குளித்தலை சுங்ககேட் பகுதியில் சிபிஐஎம், காங்கிரஸ், விசிக, பாஜக,தேமுதிக, எஸ்டிபிஐ, அமமுக, வளரும் தமிழகம், விஜய் மக்கள் இயக்கம் உள்ளிட்ட அனைத்துக் கட்சியினரும், அமைப்பினர் ஒன்றிணைந்து மாவட்ட மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை குளித்தலையில் தான் செயல்பட வேண்டும் என்றும், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை என பெயர் பலகை வைக்க வேண்டும் என கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் கரூர் மாவட்டத்திற்கு அறிவிக்கப்படும் திட்டங்கள் அனைத்தும் கரூர் பகுதிக்கு தான் சென்று அடைகிறது என்றும், குளித்தலை, கிருஷ்ணராயபுரம் ஆகிய இரண்டு தொகுதிகள் புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டினார். மேலும், சுங்க கேட்டில் இருந்து பெயர்பலகை வைப்பதற்காக அரசு மருத்துவமனையை நோக்கி ஊர்வலமாக வந்தனர்.

அப்போது, பெயர் பலகை பிளக்சினை இளைஞர் ஒருவர் எடுத்துக்கொண்டு மருத்துவமனையில் பெயர் பதிக்க போலீசாருக்கு சிக்காமல் ஓடினார். அவரை போலீசார் துரத்திப் பிடித்து அவரிடமிருந்த பெயர் பிளக்சினை பறிமுதல் செய்தனர்.

மேலும் மருத்துவமனையை நோக்கி ஊர்வலமாக வந்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் சிறை வைத்தனர்.

குளித்தலை தொகுதி முன்னாள் மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதி முதன் முதலில் போட்டியிட்டு சட்டசபை சென்ற தொகுதி என்கின்ற பெயர் இன்னும் இருக்கும் நிலையில், தற்போதைய திமுக ஆட்சியிலும் குளித்தலைக்கு தலைமை மருத்துவமனை என்கின்ற பெயர் வைக்க கூடாதா..?, அதுவும் கூட்டணி கட்சியினரை குற்றவாளிகளை துரத்தி பிடிப்பது போல் பிடிக்கும் போலீஸ், கஞ்சா விற்பனை, 24 மணிநேரமும் மது விற்பவர்களை விட்டு விடுகின்றது என்கின்றனர் சமூக நல ஆர்வலர்கள்.

Views: - 502

0

0