போதைப் பொருள் இல்ல… இது நெல் மூட்டை : போலீசாரின் செயலால் விவசாயிகள் அதிருப்தி.. தர்ணா போராட்டத்தால் பரபரப்பு

19 July 2021, 4:42 pm
karur paddy - updatenews360
Quick Share

மாவட்டம் விட்டு மாவட்டம் நெல் கொண்டு வரக்கூடாது எனக் கூறி, அரசு நெல் குடோனுக்கு திருச்சி, தஞ்சையிலிருந்து கொண்டு வந்த நெல் லாரிகளை பிடித்து வைத்து உணவு பாதுகாப்புத்துறை போலீஸாரை கண்டித்து விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஆந்திரா நெல்கள் சாகுபடி செய்யப்பட்டு, அனைத்தையும் ஒன்றிணைத்து லாரிகள் மூலம் இந்த நெல்களை தாராபுரம் பகுதியில் அரைத்து பின்பு விற்கப்பட்டு வருகின்றது. பின்னர் இந்த அரிசியானது மூட்டை, மூட்டைகளாக திருப்பூர், ஈரோடு, தாராபுரம், கரூர் ஆகிய பகுதிகளில் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில், லாரிகளில் நேற்றிரவு வந்த 2 லாரிகளை கரூர் அடுத்த சுக்காலியூர் செக்போஸ்ட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த உணவு பாதுகாப்புத்துறை போலீஸார் மடக்கி பிடித்துள்ளனர். பின்னர், இந்த லாரிகள் கரூர் அடுத்த தொழிற்பேட்டை, அரசு நெல் குடோனுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதனால், பாதிக்கப்பட்ட சுமார் 20க்கும் மேற்பட்டோர், தொழிற்பேட்டை தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கழகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து அவர்கள் கூறியதாவது :- விவசாயிகளுக்கு ஒரு நல்ல தீர்வு காண வேண்டுமென்றும், நல்ல விலைக்கு தங்களது நெல்லை விற்றுத் தரவேண்டுமென்றும் உரிய ஆவணங்களுடன் லாரியில் எடுத்துச் செல்லும் நெல் மூட்டைகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். மேலும், மற்ற மாவட்டங்களுக்கு அரசு விதிகளுக்கு உட்பட்டு மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரிகள் கட்டப்பட்டு, உரிய அனுமதி பெற்று கோர்ட் ஆர்டர் வழங்கப்பட்ட பின்னர், எடுத்து செல்லும் நெல் மூட்டைகள் அடங்கிய லாரிகளை திடீரென்று மடக்கி பிடிப்பது எந்தவிதத்தில் நியாயம்.

இது குறித்து தமிழக முதல்வர் வரை சென்று ஒட்டு மொத்த வணிகர்கள் மற்றும் நெல் விவசாயிகள் என்று அனைவரும் சேர்ந்து மாபெரும் போராட்டம் நடத்தும் அளவிற்கு, கரூர் உணவு பாதுகாப்புத்துறை போலீஸார் நடந்து கொள்கின்றனர். உரிய ஆவணங்கள் காண்பிக்கப்பட்டும் எடுத்து செல்ல அனுமதி இல்லை என்பது விவசாய பொருட்களையும், விவசாயத்தினையும், விவசாயத்தினை நம்பியுள்ள வியாபாரிகளையும் கொச்சைப்படுத்தும் விதமாக இருக்கிறது.

உணவுபாதுகாப்புத்துறை போலீஸாரின் இந்த நடவடிக்கையால் சுமார் 850 மூட்டை ஆந்திரா பொன்னி நெல் மூட்டைகள் தேங்கியுள்ளன. இதனை உரிய நேரத்தில் அரைக்க விட்டால், அப்புறம் விணாகி விடும் என்பதினால், சுமார் 8 லட்சம் மதிப்பிலான நெல்லை காத்து, அதை மீண்டும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும், எனக் கோரிக்கை விடுத்தனர்.

Views: - 120

0

0