தனியார் பஞ்சு மில்லில் பயங்கர தீ விபத்து : பல லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள், பஞ்சு பேல்கள் எரிந்து நாசம்

Author: Babu Lakshmanan
23 December 2021, 2:26 pm
Quick Share

கரூர் அருகே தனியார் பஞ்சு மில்லில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள், பஞ்சு பேல்கள் எரிந்து நாசமாகின.

கரூர் மாவட்டம் வெள்ளியணையை அடுத்த லட்சுமி புரத்தில் எஸ்.எஸ்.பி. சி காட்டன் மில்ஸ் பி லிமிடெட் எனும் தனியார் பஞ்சு மில் செயல்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டம் வீரப்பன் சத்திரத்தை சார்ந்த சுப்பிரமணி என்பவருக்கு சொந்தமான அந்த மில்லில் சுமார் 250 தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இன்று வழக்கம் போல் பஞ்சு அரைக்கும் இந்திரத்தில் பஞ்சு அரைக்கும் பணியில் பணியாளர்கள் வேலை பார்த்துள்ளனர்.

அப்போது அந்த இயந்திரத்தில் மின் கசிவு காரணமாக தீ பற்ற துவங்கியுள்ளது. அதனை பார்த்த ஊழியர்கள் அணைக்க முயன்ற போது தீ மளமளவென பரவ ஆரம்பித்தது. இதனை பார்த்த ஊழியர்கள் அனைவரும் வெளியேறி பாதுகாப்பான இடத்திற்கு வந்து சேர்ந்தனர். தீ அருகில் இருந்த மற்ற இயந்திரங்களுக்கும், அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த பஞ்சு பேல்களுக்கு பரவியதை அடுத்து, அனைத்தும் தீ பிடித்து எரியத் துவங்கியது.

இதனை அடுத்து கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தீயணைப்பு நிலையத்தில் இருந்து வந்த 2 வாகனங்களில் வந்த வீரர்கள் தீயணை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எரியும் பஞ்சு பேல்கள் அணைக்க, அணைக்க மீண்டும் எரிந்து வருகிறது. அவற்றை முழுமையாக அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்களும், பஞ்சு மில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். எரிந்து கொண்டிருக்கும் பஞ்சு அரைக்கும் இயந்திரங்கள், பஞ்சு பேல்களின் மதிப்பு பல லட்சம் வரும் என கூறப்படுகிறது. இது தொடர்பாக வெள்ளியணை காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 415

0

0