குறைந்த அளவிலான சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. பேருந்தில் தொங்கியபடி நீண்ட தூரம் பயணித்த பயணிகள் : முதல் நாளே இப்படியா..?

Author: Babu Lakshmanan
13 January 2022, 9:21 am
Quick Share

கரூர் : சிறப்பு பேருந்துகள் இல்லாமல் சொந்த ஊர்களுக்கு பயணிக்க பேருந்தில் நின்றபடி தொங்கியபடி பயணிகள் பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் சொந்த ஊருக்கு செல்ல, கோவை, திருப்பூர், ஈரோடு, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் கரூர் வழியாக திருச்சி மார்க்கமாக தஞ்சை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு கிளம்ப தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், கொரோனா 3ம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், தமிழகம் முழுவதும் வணிக நிறுவனங்கள், ஜவுளி கடைகள், நகைக் கடைகள் மற்றும் பேருந்துகள் என அனைத்திலும் 50 விழுக்காடு மட்டுமே பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

ஆனால், தமிழக அரசால் இயக்கப்படும், அரசுப் பேருந்துகளில், பொங்கல் பண்டிகையையொட்டி, குறைந்த எண்ணிக்கையிலான சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதால், பயணிகள் விரக்தியில் உள்ள நிலையில், பேருந்தில் நின்ற வாழும் பேருந்துகளில் தொங்கியவாறு பயணித்து வருகின்றனர். எப்போதும், தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகைக்கு கூடுதல் சிறப்பு பேருந்துகள், அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இயக்கப்படுவது வழக்கம்.

இந்நிலையில் தமிழர்களின் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு கூடுதல் பேருந்துகள் இயங்கவில்லை என்பது வருத்தத்திற்குரிய விஷயமாகும். குறிப்பிட்ட சில பேருந்துகள் மட்டுமே இயக்கி வரும் அரசு போக்குவரத்து கழகத்தில் மக்கள், தங்கள் ஊர்களுக்குச் செல்ல வேண்டும் என்ற காரணத்தினால் முண்டியடித்து பயணம் செய்து வருகின்றனர்.

Views: - 271

0

0