மாலை தாண்டும் நிகழ்வில் எல்லையை நோக்கி ஓடிய சலைஎருது மாடுகள் ; மஞ்சள் பொடியை தூவி வரவேற்ற பொதுமக்கள்..!!

Author: Babu Lakshmanan
16 August 2022, 6:40 pm
Quick Share

தெலுங்கபட்டி சக்காளம்மன் கோவில் திருவிழாவில் சலைஎருது மாடுகள் மாலை தாண்டும் விழாவில் மாடுகள் எல்லையை நோக்கி ஓடியதை பொதுமக்கள் திரண்டு நின்று பார்வையிட்டனர்.

கரூர் மாவட்டம் தோகைமலை அருகே தெலுங்கபட்டியில் சக்காளம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு மாலை தாண்டும் திருவிழா நடத்துவது வழக்கமாக இருந்து வருகிறது. அதனை தொடர்ந்து, இந்த ஆண்டிற்கான திருவிழா நடத்துவதற்கு கஸ்தூரி ரெங்க வசகப்பு நாயக்கர் பாளையபட்டு மந்தைக்கு உட்பட்ட கிராம மக்கள் முடிவு செய்தனர்.

சக்காளம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து முக்கியதர்களுக்கு காப்பு கட்டி திருவிழா தொடங்கப்பட்டது. அன்று முதல் இப்பகுதி பக்தர்கள் விரதம் இருந்து சக்காளம்மனுக்கு 3 கால சிறப்பு பூஜைகளை செய்து வழிபட்டு வந்தனர்.

அதனை தொடர்ந்து, முக்கிய நிகழ்ச்சியான சலைஎருது மாடுகள் மாலை தாண்டும் நிகழ்ச்சி நடந்தது. 2 கி.மீ தொலைவில் உள்ள கொத்துகொம்பு கோவிலில் சிறப்பு அபிசேகம் செய்து அனைத்து சலை எருது மாடுகளுக்கும், புன்னிய தீர்த்தம் தெளித்து மாலை ஓட்டத்தை தொடங்கி வைத்தனர்.

அங்கிருந்து எல்லை கோட்டை நோக்கி சலை எருது மாடுகள் ஓடி வந்தது. இதில் புதுக்கோட்டை மாவட்டம் சேமங்களம் அய்யாசாமி மந்தை மாடு முதலாவதாக வந்து வெற்றி பெற்றது. 2வதாக கரூர் மாவட்டம் மணச்சணம்பட்டி உடுமல் சீல்நாயக்கர் மந்தை மாடு வெற்றியின் எல்லை கோட்டை தாண்டியது.

அப்போது இவர்களின் சமூக வழக்கப்படி 3 கன்னி பெண்கள் வைத்திருந்த மஞ்சள் பொடியினை வெற்றி பெற்ற சலை எருது மாடுகள் மீது தூவி வரவேற்று எழும்பிச்சை பழம் பரிசாக வழங்கப்பட்டது. இதில் திருச்சி, திண்டுக்கல், கரூர், புதுக்கோட்டை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Views: - 405

0

0