பண்டிகைக்கால பர்ச்சேஸ்…. கல்லா கட்டும் கரூர் காவல்துறை… வாகன பார்க்கிங் கட்டண பேனரை வைத்து அலப்பறை… பொதுமக்கள் அதிருப்தி!!

Author: Babu Lakshmanan
22 October 2021, 4:15 pm
karur police - updatenews360
Quick Share

தீபாவளி பண்டிகை வருவதை முன்னிட்டு கரூரில் உள்ள திருவள்ளுவர் மைதானத்தில் வாகனங்களை நிறுத்த கட்டணம் விதிக்கப்படுவதாக கரூர் நகர போக்குவரத்து காவல்துறை சார்பாக வைக்கப்பட்ட பேனரால் சர்ச்சை எழுந்தது.

கரூர் நகரில் சுங்க வரிக் கட்டணம் தரைக்கடைகளுக்கு கிடையாது. இந்நிலையில், தற்போது தீபாவளி திருநாள் பண்டிகை வரும் நிலையில், ஆங்காங்கே பொதுமக்கள் மீண்டும் இரண்டு வருடங்களுக்கு பின்பு புத்துயிர் பெற்றது போல், ஆங்காங்கே நகைக்கடைகள், ஜவுளிக்கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்கி வருகின்றனர்.

குறிப்பாக, கரூர் என்றாலே, டெக்ஸ்டைல், ஏற்றுமதி நிறுவனம், கொசுவலை, பஸ்பாடி மற்றும் விவசாயம் ஆகிய தொழில்களில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் மற்றும் அத்தொழில்களைச் சார்ந்தவர்கள் என்று பலரும் பொருட்களை வாங்கி வரும் சமயத்தில், கரூர் போக்குவரத்து காவல்துறை வைக்கப்பட்ட பேனரால் சர்ச்சை எழுந்துள்ளது.

கரூர் நகரில் பண்டிகை காலங்களில் நகராட்சி நிர்வாகமோ, அல்லது மாவட்ட நிர்வாகமோ வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூல் செய்வதுதான் வழக்கம். ஆனால், இந்த முறை, வழக்கத்திற்கு மாறாக, போக்குவரத்து காவல்துறை சார்பாக வைக்கப்பட்ட பேனரில், தீபாவளி வருவதை முன்னிட்டு கரூரில் உள்ள திருவள்ளுவர் மைதானத்தில் வாகனங்களை நிறுத்த இருசக்கர வாகனங்களுக்கு 5 ரூபாய் என்றும், நான்கு சக்கர வாகனத்திற்கு 10 ரூபாய் என்றும் கட்டணம் விதிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

பொதுமக்கள் அதிகம் கூடும் இடம் இடமான, கரூர் பேருந்துநிலையம் ரவுண்டானா அருகேஉள்ள காமராஜர் சிலைக்கு கீழே பிளக்ஸ் வைத்துள்ளது பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நகராட்சி நிர்வாகமோ, மாவட்ட நிர்வாகமோ இது போன்ற முடிவினை எடுப்பதற்குள், போக்குவரத்து காவல்துறை, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதை விட்டு விட்டு, இரு சக்கரவாகனம், நான்கு சக்கர வாகனங்களுக்கு டோக்கன் போட்டு கட்டணம் வசூல் செய்வதா? என்று பொதுமக்களும், சமூகநல ஆர்வலர்களும் கேள்வி கேட்டு வருகின்றனர்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, திருவள்ளுவர் மைதானம், பேருந்துநிலையம் ரவுண்டானா, ஜவகர் பஜார் உள்ளிட்ட பகுதிகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வாகனங்களை நிறுத்தக் கட்டணம் வசூல் செய்யப்படும். வழக்கமாக நகராட்சி நிர்வாகம் சார்பாக வைக்கப்படும் பிளக்ஸ் போர்டுகள் வைக்காத நிலையில், பலமுறை காவல் துறை சார்பாக வலியுறுத்தப்பட்டது. ஆனால், நகராட்சி நிர்வாகம் பேனரை வைக்க முன்வராததால் நகர போக்குவரத்து காவல்துறை சார்பாக இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வசூல் செய்யப்படும் என்று பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டது.

மேலும், கரூரில் உள்ள திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் தீபாவளி முன்னிட்டு வாகனங்கள் நகராட்சி சார்பிலேயே வசூல் செய்யப்படும் என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும், காவலர்கள் மக்களை காப்பவர்கள் என்பதை மறந்து கல்லா கட்டும் பணியை கையில் எடுப்பது போன்ற பேனரை கரூர் நகரில் வைத்தது பொதுமக்களிடையே பேசுபொருளாகி விட்டது.

Views: - 497

0

0