கீழடியில் 6ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி… ஊரடங்கு உத்தரவால் நிறுத்தப்பட்டது!

26 March 2020, 5:29 pm
Keezhadi 01 updatenews360
Quick Share

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வந்த 6ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள்  நிறுத்தப்பட்டுள்ளன.

சிவகங்கை மாவட்டம் கீழடியில், 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் வைகை ஆற்றங்கரையை ஒட்டிய பகுதிகளில் மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழு ஆராய்ச்சியைத் தொடங்கியது.

இந்த அகழாய்வில் 1,600 பொருள்கள் கண்டறியப்பட்டன. வெவ்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த மூன்று உறைகிணறுகள், பானை ஓடுகள், கண்ணாடி மணிகள், சுவர்கள், சங்க கால நாணயங்கள் ஆகியவை கண்டறியப்பட்டன.

பின்னர், 2016 ஜனவரி மாதம் 2ஆம் கட்ட அகழாய்வு தொடங்கியது. இதில் மருத்துவ குடுவைகள், பழங்காலக் கிணறு, தொழிற்சாலை, அரசு முத்திரை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் கிடைத்தன. 2017 ஜனவரி மாதத்தில்  3ஆம் கட்டம்; அதை தொடர்ந்து 4 மற்றும் 5வது கட்ட அகழாய்வை தமிழக தொல்லியல் துறை மேற்கொண்டது. இதில், சுடுமண் பொம்மைகள், தங்கம், வெள்ளி பொருட்கள், தமிழ் எழுத்து பொறித்த பானை ஓடுகள் உள்ளிட்ட 15,500 தொன்மை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

இதை தொடர்ந்து, அகழாய்வில் கிடைத்த தொல்பொருட்களை காட்சிப்படுத்தும் வகையில் கீழடியில் சர்வதேச தரத்தில் தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. கடந்த பிப்ரவரி மாதத்தில், 6ஆம் கட்ட அகழாய்வு பணிகள் கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் தொடங்கி நடைபெற்று வந்தன.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், கீழடி 6-ம் கட்ட அகழ்வாய்வு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக, தொல்லியல்துறை இணை இயக்குநர் சிவானந்தம் தகவல் தெரிவித்துள்ளது.

அதன்படி, கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் நடைபெற்று அகழ்வாய்வு நிறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply