”உதவி ஆய்வாளரை கொன்றது கோழைத்தனமான செயல்” : ஐஜி முருகன்…

1 February 2021, 6:22 pm
IG Murugan- Updatenews360
Quick Share

தூத்துக்குடி : உதவி ஆய்வாளர் பாலு மீது பின்பக்கமாக மோதி கொலை செய்ய வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு செய்யப்பட்டு இந்த சம்பவம் கோழைத்தனமான செயல் என தென் மண்டல ஐஜி முருகன் தூத்துக்குடியில் கருத்து தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் உயிரிழந்த உதவி ஆய்வாளர் பாலுவின் உடல் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறு பரிசோதனை நிறைவுபெற்றதை தொடர்ந்து அவரது உறவினர்களிடம் ஓப்படைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வளாகத்தில் அவரது உடலுக்கு தென் மண்டல ஐஜி முருகன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இதைத்தொடர்ந்து காவல்துறை உயர் அதிகாரிகள், எஸ்பி ஜெயக்குமார் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் அவரது உடல் அவரது சொந்த ஊரான முடிவைத்தானேந்தலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. முன்னதாக அவரது உடலை தென் மண்டல ஐஜி முருகன் காவல்துறை உயர் அதிகாரிகள், எஸ்பி ஜெயக்குமார் உள்ளிட்டோர் சுமந்து வந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம்  தென் மண்டல ஐஜி முருகன் கூறுகையில், “வாழவல்லான் கிராமத்தைச் சேர்ந்த ராஜகோபால் மகன் முருகவேல் என்பவர் இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார். இவர் குடிபோதையில் மினி லாரியை ஓட்டிவந்துள்ளார்.

இதையடுத்து  வாகனத்தைப் பறிமுதல் செய்த எஸ்.ஐ. பாலு முருகவேலை எச்சரித்து அனுப்பியிருக்கின்றார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த முருகவேல், மற்றொரு வாகனத்தின் மூலம் உதவி ஆய்வாளர் பாலு மீது பின்பக்கமாக மோதி உள்நோக்கத்தோடு கொலை செய்யப்பட்டுள்ளது. இது கோழைத்தனமான செயல் என்றார். பிரேத பரிசோதனையில் உடற்பகுதியில் உள்பகுதியில் காயங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

மேலும் தலைமறைவாக இருந்த முருகவேலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தேடி வந்த நிலையில், அவர் இன்று விளாத்திகுளம் நீதிமன்றத்தில் மாஜிஸ்ட்ரேட் சரவனக்குமார் முன்னிலையில் சரண் அடைந்தார். அவரை 15 நாட்கள் காவலில் வைக்க மாஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டார். அவரை காவலில் எடுத்து விசாரணை செய்த பின் முழுவிபரமும் தெரியவரும் என்றார்.

மேலும் உதவி ஆய்வாளர் பாலு குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரண நிதியும், காயமடைந்த காவலர் பொன் சுப்பையாவின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சமும் நிதியுதவி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்த அவர், அவரது குடும்பத்தார் ஒருவருக்கு வேலை வழங்கப்படும் என்றார். மேலும் குற்றவாளி மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

Views: - 0

0

0