கிசான் திட்டத்தில் தமிழகத்தில் மட்டும் தான் மாபெரும் ஊழல் : வேலூர் இப்ராஹிம்!!
23 September 2020, 5:13 pmசேலம் : கிசான் திட்டத்தில் தமிழகத்தில் மட்டும்தான் மாபெரும் மோசடி நடைபெற்றுள்ளது என தமிழ்நாடு ஏகத்துவ ஜமாத் தலைவர் வேலூர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் சாதனைகளை பொது மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் வகையில் தமிழ்நாடு ஏகத்துவ ஜமாத் தலைவர் வேலூர் இப்ராஹிம் குமரி முதல் மெரினா வரை யாத்திரை மேற்கொண்டு வருகிறார். அதன்படி சேலம் மாவட்டத்திற்கு இன்று வருகை தந்த வேலூர் இப்ராஹிம் தாதகாப்பட்டி பகுதியில் பொதுமக்கள் மத்தியில் மத்திய அரசின் சாதனைகள் குறித்து விளக்கி பேசினார். தொடர்ந்து மத்திய அரசின் சாதனை விளக்க துண்டுப் பிரசுரங்களையும் பொதுமக்களுக்கு வழங்கினார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வேலூர் இப்ராஹிம், நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் நலன் கருதி மத்திய அரசு கொண்டுவந்த கிசான் திட்டத்தில் தமிழகத்தில் மட்டும்தான் மாபெரும் மோசடி நடைபெற்றுள்ளது. இந்த முறைகேடு வழக்கில் சிபிசிஐடி விசாரணை நேர்மையாக இருக்கும் என நம்புவதோடு இத்திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட அரசு அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கையை தமிழக அரசு எடுக்கும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் கிசான் திட்டத்தில் மாபெரும் மோசடி நடைபெற்றுள்ளதை போல மத்திய அரசின் அனைவருக்கும் வீடு திட்டத்திலும் மாபெரும் மோசடி நடைபெற்றுள்ளது என்பது யாராலும் மறைக்க முடியாத உண்மை என குற்றம் சாட்டியுள்ளார்.
இனியாவது மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களில் எவ்வித ஊழலும் நடைபெறாமல் இருக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.