மீண்டும் சரிவை நோக்கி பின்னலாடை நிறுவனங்கள் : நூல் விலை உயர்ந்ததால் தொழில்துறையினர் அதிர்ச்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
1 November 2021, 8:36 pm
Knitting company - Updatenews360
Quick Share

திருப்பூர் : நூல் விலை இன்று ஒரே நாளில் 50 ரூபாய் அதிகரிப்பு காரணமாக திருப்பூர் பின்னலாடை தொழில் மீண்டும் சரிவை சந்திக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

தொழில்நகரம் என்று அழைக்கப்படும் திருப்பூரில் ஆடை தயாரிப்பு பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இதன் காரணமாக இந்த தொழிலை ஏராளமானவர்கள் தேர்ந்தெடுத்து செய்து வந்து கொண்டிருக்கிறார்கள். இதனால் திருப்பூரில் திரும்பும் திசையெங்கும் பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த நிறுவனங்களிலும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இந்த தொழிலாளர்களுக்கு உணவு, உடை, தங்குமிடம், வாகன வசதி போன்றவை நிறுவனங்கள் சார்பில் செய்துகொடுக்கப்படுகின்றன. வேலை வாய்ப்பு அதிகமாக இருந்து வருவதால், திருப்பூருக்கு தினமும் வெளிமாநிலம், வெளிமாவட்டம் என பல்வேறு பகுதிகளில் இருந்து தொழிலாளர்கள் வேலை தேடி வருகிறார்கள்.

தொழில்துறையினருக்கும் தொழிலாளர்கள் பற்றாக்குறையாக இருந்து வருவதால், உடனே அவர்களை வேலைக்கு சேர்த்து விடுகிறார்கள். பின்னலாடை என்பது ஒரு இடத்தில் மட்டுமே தயார் செய்யப்படுவதில்லை. இதுபோல் ஒரு மூலப்பொருளாலும் தயாரிக்கப்படுவதில்லை. இதற்கு ஏராளமான மூலப்பொருட்கள் தேவைப்படுகிறது.


இதுபோல் பிரிண்டிங், சாயம், தையல், கட்டிங் என்பது உள்பட ஏராளமான ஜாப் ஒர்க்குகள் செய்வதற்காக, அந்தந்த ஜாப் ஒர்க் நிறுவனங்களுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன.
இங்கு ஜாப் ஒர்க்குகள் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அனுப்பிவைக்கப்படும். இதன் பிறகே பின்னலாடை தயாரிப்பு முழுமை பெறும்.

இந்த பின்னலாடை தயாரிப்பில் மிக முக்கிய பங்கு வகிப்பது நூல் ஆகும். பின்னலாடைகளில் 60 சதவீதம் நூலின் பங்கு இருந்து வருகிறது. இதனால் மிக முக்கிய மூலப்பொருளாக நூல் இருந்து வருகிறது.

ஆர்டர்களை பெற்ற உடனே, ஆடைகளுக்கான விலையும் நிர்ணயம் செய்யப்பட்டு தொழில்துறையினர் ஒப்பந்தம் மேற்கொள்கிறார்கள். இதன் பின்னர் ஒப்பந்தத்தின் படி ஆடைகள் தயார் செய்யப்படுகிறது. இந்த ஆடைகளின் விலை நூல் உள்ளிட்ட அனைத்து மூலப்பொருட்களின் விலையை பொறுத்தே முன்பே தீர்மானிக்கப்படும். கடந்த காலங்களில் நூலின் விலை சீராக இருந்து வந்தது.

இதனால் பின்னலாடை தொழிலில் எந்த பிரச்சினையும் இல்லாமல் இருந்து வந்தது. ஆனால் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக நூலின் விலை அடிக்கடி உயர்ந்து வருவதாலும், நூல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாலும், பின்னலாடை தொழில் மீண்டும் சரிவை சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆர்டர்களை அனுப்ப முடியாமலும் தொழில்துறையினர் அவதியடைந்து வருகிறார்கள்.

திருப்பூரை பொறுத்தவரை காட்டனை பயன்படுத்தி ஆடை தயாரிப்பவர்களே அதிகம். காட்டன் நூலை பயன்படுத்தி ஆடை தயாரிக்கிறவர்கள் 85 சதவீதமும், விஸ்கோஸ் நூல் 10 சதவீதமும், பாலியஸ்டர் நூல் 5 சதவீதமும் என இருந்து வருகிறது. இதிலும் திருப்பூர் தொழில்துறையினர் 20 கவுண்டு, 30 கவுண்டு, 40 கவுண்டு உள்ளிட்ட காட்டன் நூல்களை வாங்கியே ஆடைகளை தயாரிக்கிறார்கள்.

கடந்த ஆண்டு டிசம்பரில் 210 ரூபாயாக இருந்த நூலின் விலை மாதம் தோறும் 10, 20 என அதிகரித்து கடந்த மாதம் 300 ரூபாயாக இருந்தது. இந்நிலையில் இன்று யாரும் எதிர்பாராத வண்ணம் நூல் விலை கிலோவுக்கு 50 ரூபாய் அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு சிறு உற்பத்தியாளர்கள் முதல் ஏற்றுமதியாளர்கள் வரை கடும் சிரமத்தை சந்திக்க வைத்துள்ளது. இது தொடர்பாக நூல் வியாபாரிகளிடம் விலையை குறைக்கும் படி பலர் தெரிவித்தும், இது வரை நூல் விலை குறையவில்லை. இந்த திடீர் விலை உயர்வு கொரோனா காலத்தில் இருந்து மீண்டு வந்து மீண்டும் ஆடை உற்பத்தி தொழிலை செய்கிறவர்களுக்கு மேலும் ஒரு சோதனையாக உள்ளது.

இது குறித்து ஆடை உற்பத்தியாளர்கள் கூறுகையில், திருப்பூரில் அனைத்து தொழில்களும் ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல்பட்டு வருகின்றன. ஒரு புரிந்துணர்வின்படியே ஆடை தயாரிப்பு தொழில் நடக்கிறது. இந்நிலையில் ஆர்டர்கள் கொடுத்தாலும் நூல் உடனே கிடைப்பதில்லை. 25 நாட்கள் வரை நூல் கிடைக்க ஆகிறது.

இதுபோல் நூலின் விலையும் உயர்ந்துள்ளது. இதனால் ஆடை உற்பத்தியாளர்கள் பலரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இது குறித்து தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம், தமிழ்நாடு நூற்பாலை மில்கள் சங்கம் உள்பட பல்வேறு சங்கங்களுக்கு நூல் விலையை கட்டுப்படுத்தும்படி ஏராளமான கோரிக்கைகள் விடுத்தும் குறைக்கப்படவில்லை. மாறாக மேலும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இது மிகவும் கவலையளிக்கிறது.

நூல் உள்நாட்டு உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்களுக்கு கொடுக்கப்படுவதில்லை. பலரும் நூலை ஏற்றுமதி செய்யவே விரும்புகிறார்கள். உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு கொடுக்காமல் இருப்பு வைக்கப்படுவதால், செயற்கை தட்டுப்பாடு உருவாகி வருகிறது. நூல் உள்நாட்டு உற்பத்தியாளர்களின் தேவைகளுக்கு பிறகே ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு இல்லாதபட்சத்தில் இங்குள்ள நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு, மூடப்படும் நிலை ஏற்படும். இதன் பின்னர் ஏற்றுமதி ஆர்டர்கள் இல்லாத நிலையில், நூல்களை விற்க முடியாமல் நூற்பாலைகளும் பாதிக்கப்படுவார்கள். எனவே நூற்பாலைகள் வெளிநாட்டு ஆர்டர்களில் கவனம் செலுத்தாமல், உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.

இந்த நூல் விலை பிரச்சினைக்கு மத்திய, மாநில அரசுகள் விரைவாக தீர்வு காண வேண்டும். தொழில்துறையினர் மற்றும் நூற்பாலை சங்கங்களை அரசு அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இதில் விலை உயர்வை கட்டுப்படுத்த அறிவுறுத்த வேண்டும். நூல் ஏற்றுமதியை விட ஆடை ஏற்றுமதியே அரசுக்கு லாபம் என்பதை மத்திய, மாநில அரசுகள் நினைவில் கொள்ள வேண்டும் எனவும் தொழில்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 743

0

0