கொடைக்கானலில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள்… வீடுகளிலேயே தங்கிக் கிடக்கும் விவசாயிகள் : நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
Author: Babu Lakshmanan29 November 2021, 9:23 am
கொடைக்கானல் கீழ் மலைப் பகுதிகளில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால், பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கொடைக்கானல் மலைப் பகுதிகளான பேத்தப்பாறை, ஐந்து வீடு, பாரதி அண்ணா நகர், பி.எல்.செட், பெரும்பாறை, கே.சி.பட்டி, பாச்சலூர் உள்ளிட்ட பல்வேறுப் பகுதிகளிலுள்ள விவசாய தோட்டங்களில் முகாமிட்டு விவசாயப் பயிர்களையும், மின் வேலிகள், மின் கம்பங்களை யானைகள் சேதப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில் கொடைக்கானல் கீழ் மலைப் பகுதியான பாச்சலூர் அருகே பள்ளத்துக்கால்வாய் பகுதியிலுள்ள விவசாய நிலத்தில் காட்டு யானை முகாமிட்டு அங்கு பயிரிடப்பட்டுள்ள பீன்ஸ் பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.
இதனைத் தொடர்ந்து, அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், பள்ளத்துக்கால்வாய் அருகே உள்ள நடுப்பட்டி பகுதியில் வனத்துறையினர் ஒலி பெருக்கி மூலம் அறிவிப்பு விடுத்து வருகின்றனர்.
அதில் பள்ளத்துக்கால்வாய் பகுதியிலுள்ள விவசாய நிலங்களில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளை விரட்டும் பணி நடைபெறுகிறது, இதனால் அப்பகுதிகளில் உள்ள பொதுமக்கள் வெளியே வரவேண்டாம், தோட்ட பணிகளுக்கும் செல்ல வேண்டாம் என்றும், யானை இருக்கும் இடம் தெரிந்தால் வனத்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கலாம். மேலும் யானையை விரட்டுவதற்கு முயற்சிக்க வேண்டாம், அவற்றை துன்புறுத்த வேண்டாம் என வனத்துறையினர் எச்சரித்து வருகின்றனர்.
கொடைக்கானல் மலைப் பகுதிகளில் தற்போது காட்டு யானைகள் தொல்லையால் விவசாயிகள் பாதிப்படைந்து வருகின்றனர். எனவே வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொது மக்கள் கோரிக்கையாகும்.
0
0